அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’  தடுப்பூசி போட்டுக் கொண்ட சர்வதேச பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்தது. 


கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை, பிரான்ஸில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. பிரான்சில் கண்டறியப்படும் புதிய தொற்றுக்கு  உருமாறிய கொரோனா வைரஸ்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்ஸில் தொடர்ச்சியாக பீட்டா மற்றும் டெல்டா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, தனது  எல்லையில் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. 


செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் (அல்லது) பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், வரும் இலையுதிர் காலத்தில் பிரான்ஸ் நாட்டில் இலவச கொரோனா பரிசோதனை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையைத் தவிர்த்து,மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டு உண்மையான பாதுகாப்பை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், வரும் ஜூலை 21ம் தேதியில் இருந்து சினிமா, உணவு விடுதி, தீம் பார்க் போன்ற பொது இடங்களில் கலந்து கொள்வோர் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




எனவே, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான செயல்முறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரான்ஸ் அரசு செய்துவருகிறது.               


அவசர கால மருத்துவ பயன்பாட்டுக்கு ஐரோப்பிய மருத்துவ முகமை (EMA) ஒப்புதல் வழங்கிய  ஃபைஸர், மாடர்னா, ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் ஆஸ்ட்ராஜெனிக்கா, ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளை மட்டுமே பிரான்ஸ் அரசு அங்கீகரித்துள்ளது. ஆனால்,  ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம்  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. மேலும், தற்போது வரை சீனா, ரஷ்ய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கவும் அந்நாடு மறுத்துவிட்டது. 




இந்நிலையில், இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த  ‘கோவிஷீல்டு’ (ஆஸ்ட்ராஜெனிக்கா - இந்தியா வகை) தடுப்பூசிக்கு பிரான்ஸ் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, ஐரோப்பிய  ஒன்றியத்தில் உள்ள 17 நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளன. தற்போது, கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை  போன்ற பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. எனவே, இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பிரான்ஸ் நாட்டில் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. 


டெல்டா வகை தொற்று:  டெல்டா வகை கொரோனா தொற்று மிகவும் அதிகமாக பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக, தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களிடம் அதிகமாக பரவி வருகிறது. தற்போது, உலகளவில், 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.   


முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், உருமாற்றம் இல்லாத கொரோனா வைரஸ்களை விட டெல்டா வகை 90% அதிகம் பரவக்கூடியவை என்றும், ஆல்பா வகை கொரோனா தொற்றுகள் 29% கூடுதலாக பரவக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டது.  


மேலும் வாசிக்க: 


டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வேரியண்ட் என்றால் என்ன?


Breakthrough infections : தடுப்பூசிக்குப் பிந்தைய கொரோனா; உருமாறிய டெல்டா வகையே காரணம்! ஐ.சி.எம்.ஆர்., ஆய்வு!