தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் (Breakthrough infections) வெறும் 10% பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர அறிகுறிகள் காணப்பட்டதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.       


"Clinical characterization and Genomic analysis of COVID-19 breakthrough infections during second wave in different states of India" என்ற இந்த ஆய்வுக் கட்டுரை கடந்த ஜூலை 15ம் தேதி medRxiv என்ற சுகாதார அறிவியல் நாளிதழில் 'preprint' ( மற்ற  ஆய்வாளர்களால் இன்னும் சக மதிப்பாய்வு செய்யப்படவில்லை) வெர்ஷனில் வெளியானது. 


 ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்:


இந்தியாவின் 17 மாநிலங்களில் தடுப்பூசி டோஸ்கள் போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 677 பேரின் மாதிரிகள் சார்ஸ்-கோவிட் – 2 மரபணு வரைபட ஆய்வகங்களுக்கு அனுப்பி பகுப்பாய்வு  செய்யப்பட்டன .    


முடிவுகள்: 


கொரோனா இரண்டாவது அலையில் 86% தடுப்பூசிக்குப் பிந்தைய கொரோனா பாதிப்புகளுக்கு (Breakthrough Infections) புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று காரணமாக அமைந்துள்ளது. 


தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களில், 10% பேர் (71 பேர்) மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர அறிகுறிகளை உருவாக்கியுள்ளனர். இருப்பினும், கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ ஆக்ஸிஜன் உதவி மற்றும் அவசர சிகிச்சை உதவி யாருக்கும் தேவைப்படவில்லை.  


தடுப்பூசிக்குப் பிந்தைய கொரோனா பாதிப்பு காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் (3/641).  




புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்றின் தீவிரத் தன்மையை கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தடுப்பூசிக்குப் பின்பு பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான நுரையீரல் பாதிப்பு அறிகுறிகள், இறப்பு விகிதம் குறைத்து காணப்படுகிறது. இது,  நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்பு பாதுக்காக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். 


இரண்டாவது அலையும் - உருமாறிய கொரோனாவும்:  


இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta),  பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை)  ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு  புதிய உருமாறிய B.1.617 மற்றும் B.1.617.2 வகை கொரோனா தொற்று முதன்மையாக காரணமாக இருந்தன. மேலும், அம்மாநிலத்தில்  ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபணு வரிசை சோதனையில், 60% மாதிரிகளில் B.1.617.1(கப்பா) பாதிப்பும், B.1.617.2 (டெல்டா) பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது.


2021 ஏப்ரல் மாதத்தில், கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட மரபணு வரிசை சோதனையில், 99% மாதிரிகளில் டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டது. புதிய டெல்டா வைரஸ் வகைகள் அதிகம் பரவக் கூடியதாகவும், நுரையீரலை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள T478K, P681R and L452R மாற்றங்கள் டெல்டா வகையாகும். இந்த மாற்றம் வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம் என்று கணிக்கப்படுகிறது. எனவே, இத்தகையை சூழலில் ஐசிஎம்ஆர்-ன் ஆய்வு கட்டுரை தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.