இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று இலங்கை திரும்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை செய்தி நிறுவனமான நியூஸ் பெர்ஸ்ட் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.


மேலும், முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகிய பின்னர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், தற்போதைய அரசு முன்னாள் அதிபரின் வெளிநாட்டு பயணத்திற்காக செலவு செய்யவில்லை என அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். 


கோட்டபயவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார். கோட்டபய ராஜபக்ச, வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக அரச நிதியைப் பயன்படுத்துவதில்லை என அரசு தரப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பு, "முன்னாள் அதிபரின் தனிப்பட்ட நிதியினால் இதற்கான செலவுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளது.


கோட்டபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து கடந்த வாரம் தாய்லாந்து சென்றடைந்தார். இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என செய்தி வெளியானது.


சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்த அவர் கடந்த வியாழன் அன்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடந்த மாதம் மாலைதீவில் இருந்து சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த கோட்டபயவுக்கு 14 நாள் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதுடன், அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார்.


இதற்கிடையில், தாய்லாந்திடம் கோட்டபய அரசியல் புகலிடம் கோரி இருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும், அதற்கு அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசியல் தஞ்சம் கோரும் நோக்கமின்றி நாட்டிற்கு வந்திருப்பதாகவும் நாட்டை சுற்றி பார்க்க அனுமதி அளிக்க கோட்டபய கோரிக்கை விடுத்ததாக தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கோட்டபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து, ராஜபக்ச வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். இதையடுத்து, விக்கிரமசிங்க முன்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.


இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. உயர்ந்து வரும் பணவீக்கத்துடன் அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண