முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட் XVI இன்று காலமானார். அவருக்கு வயது  95. இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள வாடிகன், "திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் இன்று காலை 9.34 மணியளவில் வாடிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.


போப் ஆண்டவர், பெரும்பாலும் ராஜினாமா செய்ய மாட்டார்கள். பதவி வகிக்கும்போதே காலமாகிவிடுவார்கள். ஆனால், 600 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பெனடிக்ட் XVI தனது பொறுப்பை ராஜிநாமா செய்தார். 


ஜெர்மனியில் பிறந்த போப் எமரிட்டஸின் உண்மையான பெயர் ஜோசப் ராட்ஸிங்கர். வாடிகன் மைதானத்தில் துறவற சபையாக இருந்த இடத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.


இதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பதவி விலக போவதாக அதிர்ச்சி செய்தி வெளியிட்டார். அவரது உடல்நிலை நீண்ட காலமாக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.


இதையடுத்து, அவரது நிலை மோசமடைந்துவிட்டதாக வாடிகன் புதன்கிழமை அன்று தகவல் வெளியிட்டது. இச்சூழலில், தற்போது, போப் ஆண்டராக உள்ள பிரான்சிஸ் முன்னாள் போப்புக்கு பிரார்த்தனை செய்ய உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


முன்னாள் போப் ஆண்டவரான பெனடிக்ட் XVI, தற்போது போப் ஆண்டவராக உள்ள பிரான்சிஸ் ஆகிய இருவரும் வாடிகனில் வசித்து வந்தனர்.


முன்னாள் போப் ஆண்டவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதைகள் குறித்து விதி எதுவும் வகுக்கப்படவில்லை என்றாலும் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகள் போப் பிரான்சிஸ் தலைமையில் வாடிகனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த 2005ஆம் ஆண்டில், இறந்த கடைசி போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பாலின் உடல், செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறுதி ஊர்வலத்திற்கு வைக்கப்பட்டது. இதில், உலக தலைவர்கள் உள்பட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


16ஆம் பெனடிக்டை சுற்றிய சர்ச்சைகள்:


பொது வாழ்வில் இருந்து முற்றிலுமாக விலகிய பெனடிக்டின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின. 


கடந்த 2013ஆம் ஆண்டு, உலக கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவர் பதவியான போப் ஆண்டவர் பொறுப்பில் இருந்து உடல்நலம் மற்றும் மன நலத்தை காரணம் காட்டி பெனடிக்ட் விலகினார். 


குழந்தைகளுக்கு எதிராக கத்தோலிக்க பாதிரியார்கள் நடத்திய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், இவர் போப் ஆண்டராக இருந்தபோதுதான் வெளியே தெரிந்தது. இது, உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில், இவரின் தலைமை பண்பு குறித்து பலர் விமர்சனம் செய்தனர்.