கிரிமியாவில் உள்ள சிம்ஃபெரோபோல் என்ற இடத்தில் இந்திய மருத்துவ மாணவர்கள் பயணித்த கார் மரத்தில் மோதியதில் 4 இந்திய மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Continues below advertisement


விபத்தில் சிக்கியவர்களில் இரண்டு மாணவர்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டும், இருவர் நான்காம் ஆண்டும் படித்துக் கொண்டிருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


வியாழக்கிழமை நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கிரிமியா உள் விவகாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


முதற்கட்ட விசாரணையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ரெனால்ட் லோகன் கார் மரத்தில் மோதியது தெரியவந்தது. கார் செர்ஜிவ்-சென்ஸ்கி தெருவில் இருந்து கிரிமியாவில் உள்ள செயின்ட் சிம்ஃபெரோபோல் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. 


கடந்த 2014ஆம் ஆண்டு, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உக்ரைனில் இருந்து கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்து பின்னர் இணைத்து கொண்டது. இதை தொடர்ந்து, ரஷியா, உக்ரைன் நாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது.


அதன் தொடரச்சியாக, கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.


இதை தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ஐ.நா. அமைப்பு மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.


உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது. பல்கலைக்கழகத்தின் மீது குண்டு வீசிய காட்சிகளும் வைரலாகின. 


உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மீட்டது. அங்கு சென்றிருந்த மாணவர்களில் 90% பேர் மருத்துவம் பயிலவே சென்றிருந்தனர்.


மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் உக்ரைனில் உள்ள 18,095 இந்தியர்களில் 90% மாணவர்கள் மருத்துவம் பயிலச் சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.


அவர்களின் மருத்துவக் கல்விக்கு இந்தியாவில் அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியது. 


எனினும் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் வழிமுறைக்கு இடமில்லை என்று தெரிவித்த அரசு, மாணவர்களுக்குத் தளர்வு செய்து கொடுத்தால், அது இந்தியாவின் மருத்துப் படிப்புடைய தரத்தையே பாதிக்கும் எனவும் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.