பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். இவர் இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை அந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. 


தோஷகானா வழக்கு:


பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.


இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் அரசு முறை பயணமாக சில வெளிநாடுகளுக்கு சென்றார். பாகிஸ்தான் சட்ட விதிப்படி, அந்தநாட்டு பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அந்த பரிசுப்பொருட்களை சேமித்து பராமரிக்கும் பணியை “தோஷகானா” செய்து வருகிறது. ஆனால், இம்ரான்கானோ அதை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தன்னுடைய சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


அடுத்தடுத்து நெருக்கடி:


இந்த குற்றச்சாட்டு உள்பட இம்ரான்கான் ஆட்சியில் நடந்த ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறை, புலனாய்வு அமைப்பு உள்பட சில அமைப்பினர் அவர் மீது 37 வழக்குகளை பதிவு செய்தனர். இவற்றில் 11 வழக்குகள் கடந்தாண்டு மே மாதம் 25-ந் தேதியும், 8 வழக்குகள் கடந்தாண்டு மே மாதம் 26-ந் தேதியும், 3 வழக்குகள் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ந் தேதியும் பதிவு செய்யப்பட்டன.


தற்போதைய ஷெபாஸ் ஷெரீஃப் ஆட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் காரணமாக இம்ரான்கான் அடுத்தடுத்து நெருக்கடிக்கு ஆளாகி வந்தார். குறிப்பாக, மேலும், இம்ரான்கான் விலையுயர்ந்த பரிசுகளை விற்றது தொடர்பான உண்மைகளை மறைத்த குற்றத்திற்காக தேசிய சட்டமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.


பாகிஸ்தானில் பரபரப்பு:


பணமோசடி, அரசு கருவூல சொத்துக்களை தன் சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால், தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக இம்ரான்கான் தரப்பில் ஜாமீன் பெறப்பட்டது. அவரது ஜாமீன் மனு கடந்த 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு கடந்த மாத இறுதியில் அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்த சூழலில், இஸ்லாமபாத் நீதிமன்ற வளாகத்திலே அவரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யவிடாமல் தடுத்த அவரது வழக்கறிஞர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான்கான் கைது செய்யப்பட்ட விவகாரம் அவரது கட்சியான தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கைதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தவும் அந்த கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.