பூமியில் உருவாகும் புயல்களை கண்காணிக்க நாசா மற்றும் Rocket Lab இணைந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு CubeSats என்ற இரண்டு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.
ஏப்ரல் மாதத்தில் இந்த இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இரண்டு புயல்-கண்காணிப்பு CubeSats ஐ சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. விண்வெளி நிறுவனத்தின் TROPICS என்ற திட்டத்தின் கீழ் இந்த இரண்டு செயற்கைக்கோள்கள் விண்னில் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் இந்த திட்டத்தின் கீழ் நான்கு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். ஏற்கனவே இரண்டு கியூப்சாட்ஸ் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அடுத்த 2 கியூப்சாட்ஸ் வரும் வாரங்களில் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 33 நிமிடங்களுக்குப் பிறகு, ஷூபாக்ஸ் அளவிலான டிராபிக்ஸ் கியூப்சாட்களை பூமியிலிருந்து சுமார் 340 மைல் (550 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. TROPICS க்யூப்சாட்கள் வெப்பமண்டல சூறாவளிகள் மற்றும் அது உருவாகும்தன்மை மற்றும் சூறாவளி வலுப்பெறும் தன்மை குறித்து மேம்படுத்தப்பட்ட தனித்தன்மையுடன் தகவல்கள் சேகரிக்கும். TROPICS முதன்மை ஆய்வாளர் பில் பிளாக்வெல் கூறுகையில் " இதற்கு முன் இல்லாத அளவு புயல்களில் மைக்ரோவேவ் அலைநீளப் பகுதியைப் பார்க்கும் திறன், புயல் உருவாகி தீவிரமடையும் போது அதைப் பார்க்கும் திறன், அதன் வேகம் போன்ற பல்வேறு தகவல்களை மிகவும் துல்லியமாகவும் கிடைக்கும். புயல்களை இயக்கும் அடிப்படை செயல்முறைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும் " என கூறினார்.
பாரம்பரிய வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் இருந்து கியூப்சாட் வித்தியாசமானது, அவை மிகவும் துள்ளியமாக தரவுகளை பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி தரவுகளை அடிக்கடி சேகரித்து அனுப்புவது, விஞ்ஞானிகள் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து அதிக தகவல்கள் பெற உதவும். இந்த குழுவில் நாசா, தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மற்றும் பல குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தால் செயற்கைக்கோள் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.