சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்-பில் இந்தியாவிற்கான செயல் இயக்குநராக சுர்ஜித் பல்லா கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவருடைய பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தச் சூழலில் இந்தியாவின் அடுத்த செயல் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்தது. 


இந்நிலையில் ஐஎம்.எஃப்-ன் இந்தியாவிற்கான புதிய செயல் இயக்குநராக முன்னாள் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. இவர் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த டிசம்பர் மாதம் வரை பணியாற்றி வந்தார். 






அதன்பின்னர் இவர் இந்தியன் ஸ்கூள் ஆஃப் பிசினஸ் என்ற கல்லூரியில் நிதித்துறையின் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்தச் சூழலில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர் இந்தியாவின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் வங்கித்துறைகளில் இவர் முக்கியமான நபர்களில் ஒருவர். இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கிகள் நிர்வாகம் தொடர்பான பிரிவில் இவர் முக்கிய பங்கு வகித்தார். 


இவை தவிர பந்தன் வங்கி மற்றும் தேசிய வங்கி நிர்வாக அமைப்பு ஆகியவற்றில் இவர் பணியாற்றியுள்ளார். அத்துடன் 2018ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை மிகவும் குறைந்த வயதில் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவிவகித்து வந்தார். இவர் இந்தியாவின் புகழ் பெற்ற தகவல் தொழில்நுட்ப கல்லூரியான ஐஐடி-கான்பூரில் பயின்றுள்ளார். அங்கு இவர் எலக்ட்ரிகல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார்.


 






அதன்பின்னர் ஐஐஎம் கொல்கத்தாவில் எம்பிஏ படிப்பை முடித்தார். இதைத் தொடர்ந்து புகழ்பெற்ற சிகாகோ ஸ்கூள் ஆஃப் பிசினஸ் கல்லூரில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார். வங்கி, பொருளாதாரம், நிதித்துறை உள்ளிட்டவை தொடர்பான இவரின் ஆய்வு கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சர்வதே ஜெர்னல்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.