மெக்சிகோவைச் சேர்ந்த முன்னாள் அழகி ஒருவர் ஸ்பானிஷ் உணவகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒயின் திருடப்பட்டதில் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். வெளியான செய்தியின்படி, அந்த பெண் ஸ்பானிய ஊடகங்களால் "மிஸ் எர்த்" போட்டியில் பங்கேற்ற பிரிசிலா லாரா குவேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 28 வயதான, ரோமானிய-டச்சுக்காரரான கான்ஸ்டன்டின் கேப்ரியல் டுமிட்ருவுடன் சேர்ந்து, 1.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்டேஜ் பாட்டில்களைத் திருடியதாக, ஸ்பெயின் ஊடகங்களை மேற்கோள்காட்டி அந்த வைன் விற்பனை நிலையம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் மிகவும் மதிப்புமிக்க ஹோட்டல்-உணவகங்களில் ஒன்றான எல் அட்ரியோவில் கடந்த ஆண்டு அக்டோபரில் திருட்டு நடந்தது. இதில் பிரிசிலா குவேராவும் கேப்ரியல் டுமித்ருவும் மாண்டினீக்ரோவிலிருந்து குரோஷியாவிற்குள் நுழையும்போது இந்த வாரம் பிடிபட்டனர். இதை அடுத்து ஒன்பது மாத மனித வேட்டை முடிவுக்கு வந்ததாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு திருட்டின் போது மிச்செலின் ஸ்டார் உணவகத்தின் பாதாள அறைகளில் இருந்து 45 பாட்டில்கள் திருடப்பட்டன, இதில் ஒரு அரிய 19 ஆம் நூற்றாண்டின் பாட்டில் ஒன்றும் அடங்கும் என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
பிரசிலா குவேரா உணவகத்தின் சமையலறையை மூடிய பிறகு அறை சேவையை ஆர்டர் செய்வதன் மூலம் உணவகத்தில் பணிபுரிபவர்கள் கவனத்தைச் சிதறடித்ததாகக் கூறப்படுகிறது. ஸ்பெயின் காவல்துறையின் கூற்றுப்படி, அவரது கூட்டாளி பின்னர் ஒரு மாஸ்டர் சாவியுடன் மது வைக்கப்பட்டிருக்கும் பாதாள அறையைத் திறந்து, பல விலையுயர்ந்த பாட்டில்களை அவரது பையில் வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த ஜோடி உணவகத்தை விட்டு வெளியேறியது சிசிடிவி காட்சிகள் வழியாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பிறகு வேட்டை தொடங்கியது. இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து இந்த விவகாரம் சர்வதேச விவகாரம் ஆனது. இதில் ஸ்பானிஷ், டச்சு, குரோஷியன் மற்றும் ரோமானிய போலீஸ் மற்றும் இன்டர்போல் பிறகு தலையிட்டது.
மொண்டினீக்ரோவிலிருந்து அவர்கள் கடக்கும்போது குரோஷிய எல்லைக் காவலர்களால் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்கள் இறுதியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த ஜோடி குரோஷியாவில் வசித்து வந்ததாக தெரிகிறது. அவர்கள் தற்போது ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்