ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேக்கா  தெரிவித்திருக்கிறார்.ஒன்பதாம் தேதி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் வந்து கலந்து கொள்ளும் நாட்டு மக்கள் அனைவரும், ஒரு மாதம் அளவாவது கொழும்பில் தங்கி இருந்து இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.


ஆகஸ்ட் மாதம் மக்கள் கொழும்புக்கு திரண்டு வந்தால் தான் தலைமைத்துவத்தை ஏற்க தயாராக இருப்பதாக சரத் போன் சேர்க்க தெரிவித்து இருக்கிறார்.இலங்கை அதிபர் ரணில்  விக்ரமசிங்க காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினரை  கொண்டு விரட்டி அடித்த நிலையில், மீண்டும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கொழும்புக்கு வந்து அரசுக்கு எதிராக போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் . 


அதேபோல் அரச அடக்குமுறை தொடர்ந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீதும் அரசாங்கம் தொடர்ந்தும் வன்முறைகளை பிரயோகித்தால்  இரு மாதங்களுக்குள் மீண்டும்  மக்கள் எழுச்சி போராட்டங்கள் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது , இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களை கவனத்தில் கொள்ளுமாறு கூறியதாகவும் ஆனால் தற்போது அதற்கு மாறாக செயல்படுவதாக குற்றஞ் சாட்டியுள்ளார்.


தற்போது ரணில் விக்ரமசிங்க அதிபராக  பதவியேற்ற பின்னர் அவர் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அப்பாற்பட்ட  முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அடக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள், இவ்வாறு தொடர்ந்தால்  வரும் நாட்களில் மேலும் தீவிரமான போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


தற்போது இருக்கும் அரசை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, சர்வதேச நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.மக்களால் வெறுக்கப்படும் இந்த அரசுக்கு சர்வதேச அமைப்புகள் எந்த ஒரு உதவியும் தர முன்வரப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி மக்களின் குரலை முடக்கு முயற்சியில் அரசு ஈடு பட்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.