சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். எந்த ஒரு காரணமும் இன்றி ஒருவர் மீது ஏற்படும் உணர்வு. அதனால் தான், அனைத்தையும் கடந்து ஒருவரை நேசிக்கிறோம். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதுன் ஒரு இயல்பான நிகழ்வே.


ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர்.


தன்பாலின ஈர்ப்பாளரா பராக் ஒபாமா?


இந்த நிலையில், உலகின் பிரபலமான தலைவர் ஒருவர், தனக்கு தன்பாலின உணர்வுகள் இருந்ததாக தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த தலைவர் வேறு யாரும் அல்ல. அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாதான். இளம் வயதில் அவர் தன்னுடைய காதலிக்கு எழுதிய காதல் கடிதத்தில் தனக்கு தன்பாலின உணர்வுகள் இருந்ததை குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 1982ஆம் ஆண்டு, இந்த கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டேவிட் காரோ, இது தொடர்பான தகவலை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னாள் காதலிகள் மூவரிடமிருந்து காதல் கடிதங்களை பெற்றதாக நேர்காணலில் டேவிட் காரோ தெரிவித்துள்ளார்.


ஒபாமா எழுதிய அந்த காதல் கடிதம் ஒன்றில், தனக்கு ஆண், பெண் என இரு பாலினத்தவரின் பண்புகள் இருந்ததாகவும் கற்பனையில் தினமும் ஆணுடன் உறவில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1982ஆம் ஆண்டு, அலெக்ஸ் மெக்னியர் என் பெண்ணிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஒபாமா. அந்த சமயத்தில் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆக்ஸிடென்டல் கல்லூரியில் கல்வி பயின்று வந்துள்ளனர்.


முன்னாள் காதலிக்கு எழுதிய கடிதத்தில் வெளியான ரகசியம்:


அப்போது, அலெக்ஸ் மெக்னியருக்கு ஒபாமா எழுதிய கடிதத்தில், "தன்பாலீர்ப்பை பொறுத்தவரை, இது நிகழ்காலத்திலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கான ஒரு முயற்சி என்று நான் நம்புகிறேன். ஒருவேளை பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவில்லாத கேலிக்கூத்துகளை நிலைநிறுத்த ஏற்றுக்கொள்ளாத தன்மை. நீங்கள் பார்க்கிறீர்கள், நான் தினமும் ஆண்களை காதலிக்கிறேன். ஆனால், கற்பனையில்தான் காதலிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


டேவிட் காரோ எழுதி, கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'ரைசிங் ஸ்டார்: தி மேக்கிங் ஆஃப் பராக் ஒபாமா' என்ற புத்தகத்தில்தான் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என, மூன்று நாள்களுக்கு மொத்தம் 24 மணி நேரம் ஒபாமாவுடன் செலவிட்டு 1,472 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை டேவிட் எழுதியுள்ளார்.


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஒபாமா குறித்து குறிப்பிட்ட டேவிட், "பராக் ஒபாமாவின் கடிதங்களை அலெக்ஸ் எனக்குக் காட்டியபோது, ​​அதில் ஒன்றில் ஒரு பத்தியை திருத்தி, ‘இது தன்பாலின உணர்வுகளை பற்றியது' என அவர் என்னிடம் கூறினார்" என்றார்.