இந்தியர்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல் சம்பவங்கள்:
சமீப காலமாகவே, வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஐந்து மாதங்களில் ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோயிகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல, கனடாவில் இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கனடாவில் நேற்று இரவு இந்து கோயில் ஒன்றை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, கனட வாழ் இந்தியர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே நகரில் உள்ள பழமையான லட்சுமி நாராயண் மந்திரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் அட்டூழியம்:
கோயிலின் சுவரிலும் வாயிலிலும் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 18ஆம் தேதி, காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயலில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராவில் முகமூடி அணிந்து வந்த இருவர் கோயிலின் சுவர்களிலும் வாயிலிலும் போஸ்டவர் ஒட்டுவது பதிவாகியுள்ளது. காலிஸ்தான் புலிப்படை மற்றும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் (SFJ) கனட பிரிவு தலைவரும் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்த ஆண்டு ஜூன் மாதம் அடையாளம் தெரியாக நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தாண்டு மட்டும் கனடாவில் நான்கு இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சுவாமிநாராயண் கோயில் சேதப்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவர் மாதம், கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராம் மந்திர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம், பிராம்ப்டனில் உள்ள கோயிலில் இந்திய எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டு, சுவர் சேதப்படுத்தப்பட்டது.
கனடாவில் என்னதான் நடக்கிறது?
கனடாவில் சென்ற அணிவகுப்பு வாகனம் ஒன்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டது போன்று காட்சிப்படுத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக கனட அரசு செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கனடாவில் ஒட்டப்பட்ட காலிஸ்தான் போஸ்டர்களில் இந்திய தூதர்களின் பெயரை குறிப்பிட்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்திருந்தார்.
இதை தொடர்ந்து, இந்தியாவுக்கான கனட நாட்டு தூதரான கேமரன் மேக்கேவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தது. கனடாவில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்கள் குறித்து அவரிடம் கவலை தெரிவிக்கப்பட்டது.