நவீன உலகத்தில் நாம் நினைத்துப் பார்க்கும் இடங்களுக்கு எல்லாம் செல்லும் வாய்ப்பு பலருக்கும் கிடைத்திருக்கிறது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு, உலகில் இல்லாத பயண வாய்ப்புகள் தற்போது பெரிதும் மாற்றங்களுக்கு உள்ளாகி, பலரும் பயணங்களில் ஈடுபடுகின்றனர். 


உலகின் தலைசிறந்த சுற்றுலா தலங்களுக்கு அதிகபட்சமாக இரண்டு தினங்களில் செல்லக்கூடிய அளவிலான போக்குவரத்து மாற்றங்களும் ஏற்பட்டு, நம்மை வரலாற்றில் அதிர்ஷ்டசாலிகளாக மாற்றியிருக்கிறது. 


எனினும், இதே வேளையில், உலகம் முழுவதும் பல்வேறு இடங்கள் இன்னும் மனிதர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, பொது பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல் இருக்கின்றன. அப்படியான சில தலங்களைக் குறித்து இங்கு பார்க்கலாம்...


1. ஐஸ் கிராண்ட் ஷ்ரைன், ஜப்பான்



மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய கோயிலான இந்த இடம் ஜப்பான் மக்களால் அதிக புனிதம் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது. மேலும், ஜப்பானின் அரசு மதமான ஷிண்டோவின் புனித தலமாக இருப்பதால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வருகின்றனர். 


125 கோயில்களுக்கும் மேல் அமைந்திருக்கும் இந்த இடம் ஜப்பானின் அழகான இடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும், இங்குள்ள மிக முக்கியமான புனித இடத்திற்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை. மரத்தால் செய்யப்பட்ட வேலியால் தடுக்கப்பட்டிருப்பதால், அந்தக் கட்டிடத்தை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி உண்டு. ஜப்பானின் அரசு குடும்பமும், சில மத குருக்களுக்கும் மட்டுமே இங்கு நுழைய அனுமதி. இந்த இடத்தில் புகைப்படம் எடுப்பதற்கும் அனுமதியில்லை என்பதால் இது மேலும் மர்மம் கூட்டுகிறது. 


 


2. கின் ஷி ஹுவாங் கல்லறை, சீனா



கின் ஷி ஹுவாங் கல்லறை சீனாவின் முதல் பேரரசருடையது. மேலும் பேரரசரின் மரணத்திற்குப் பிறகான வாழ்க்கைக்காக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டிருக்கும் குகைகளால் இங்கு நுழைவது மிகவும் கடினமான ஒன்று. 


மேலும், சீன அரசு கின் ஷி ஹுவாங் கல்லறையில் அகழ்வாய்வு மேற்கொள்வதும் தடைசெய்து அறிவிப்பு வெளியிடவுள்ளது. முன்னாள் பேரரசரின் கல்லறையை கௌரவப்படுத்த சீன அரசு இந்த அறிவிப்பை மேற்கொள்ள இருப்பதால் இது உலகின் தடை செய்யப்பட்ட இடங்களுள் முதன்மை இடத்தைப் பெறுகிறது. 


 


3. வடக்கு செண்டினல் தீவுகள், இந்தியா



அந்தமான் கடல் பகுதியில் உள்ள வடக்கு செண்டினல் தீவுகள், உலகின் தடை செய்யப்பட்ட இடங்களுள் அதிக கவனம் ஈர்த்த ஒன்று. இங்கு வாழும் பழங்குடியினர் புற உலகின் தொடர்புகளை முற்றிலும் நிராகரித்து இருப்பதால், எந்த நவீன வசதியும் தொடாத இடமாகவும் இது இருக்கிறது. 


சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளாக இந்தத் தீவுகளில் வாழும் பழங்குடியினர் தங்கள் தீவுக்குள் நுழைய முயல்வோரின் மீது கடுமையான தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். 


 


4. பான்கார் கோட்டை, இந்தியா



ராஜஸ்தானில் பாழடைந்த நிலையில் இருக்கும் இந்தக் கோட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு பலராலும் சுற்றுலா சென்று பார்க்கப்பட்டது. தன்னுடைய இளைய மகனுக்காக 1573ஆம் ஆண்டு, மன்னர் அம்பர் காவா கட்டிய இந்தக் கோட்டை கடந்த 1783ஆம் ஆண்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் இப்பகுதியில் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. மேலும், கோட்டையில் சாபம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 


இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக மர்மமான பகுதியாகக் கருதப்படும் இந்த இடத்திற்கு, மாலையிலோ, இரவிலோ செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் இருப்பதாலும், கோட்டையைச் சுற்றி செயற்கை விளக்குகள் பொருத்தப்படாததாலும் இவ்வாறு கருதப்படுவதாகக் கூறப்பட்டாலும், பாழடைந்த கோட்டையில் வேறு என்னவெல்லாம் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.