இத்தாலி பாராளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டியெல்லோ இத்தாலியின் ரோமில் உள்ள பாராளுமன்றத்தில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இத்தாலி பாராளுமன்றத்தில் தாய்பால் கொடுத்த முதல் எம்பி
36 வயதான எம்பி ஆன இவர், இடதுசாரி இயக்கமான ஃபைவ் ஸ்டார் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவரது இரண்டு மாத மகன் ஃபிரடெரிகோவிற்கு பிரதிநிதிகள் கூடியிருந்த சபையில், அங்கிருந்தவர்களின் கைதட்டலுக்கு மத்தியில் பாலூட்டினார். இது நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. இத்தாலியின் பாராளுமன்ற விதிகளில் சமீபத்திய மாற்றம்தான், பெண் எம்பிக்கள் தங்கள் குழந்தைகளை அறைக்குள் அழைத்து வந்து ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுக்க கொடுத்திருக்கும் அனுமதி. மற்ற நாடுகள் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுப்பதைக் கண்டிருந்தாலும், இத்தாலியில் ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள அரசியல் சூழல் காரணமாக இதுவரை இல்லாமால் இருந்தது. அங்கு எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் உரிமைக்காக போராடுபவர்
ஸ்போர்டியெல்லோ, பெண்களின் உரிமைகளுக்காக போராடும் ஒருவர் ஆவார். உழைக்கும் தாய்மார்களுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், "பல பெண்கள் தாய்ப்பாலை முன்கூட்டியே நிறுத்துகிறார்கள், விருப்பப்படி அல்ல, மாறாக அவர்கள் பணியிடத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தின் காரணமாக அது நிகழ்கிறது. ஆனால் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிப்பதால், இதற்கான நடைமுறை மிகவும் அவசியம்." என்றார்.
பலர் பாராட்டு
அவரது செயல் பரவலான பாராட்டையும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஒருமனதாக கைதட்டலையும் பெற்றது. பார்லிமென்ட் கூட்டத் தொடருக்குத் தலைமை தாங்கிய ஜியோர்ஜியோ முலே, "அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இது முதல் முறையாகும். ஃபெடரிகோவிற்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ வாழ்த்துகள். இப்போது நாம் அமைதியாகப் பேசுவோம்" என்று குறிப்பிட்டார்.
தாய்ப்பாலை அனுமதிக்கும் புதிய விதி
2019 இல் இத்தாலியின் முதல் பெண் பிரதமரான ஜியோர்ஜியா மெலோனி முன்வைத்த முன்மொழிவுக்குப் பிறகு, தாய்ப்பாலை அனுமதிக்கும் புதிய விதி பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் மெலோனி பதவியேற்றார், இது இத்தாலிய அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. அதே ஆண்டு நவம்பரில், பாலஸ்ஸோ மாண்டெசிடோரியோவில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரத்யேக இடத்தை வழங்கும் சிறப்பு தாய்ப்பால் அறை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.