அமெரிக்க வரலாற்றில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபரானார் துணை அதிபர் கமலா ஹாரிஸ். ’இது என்னப் புதுக்கதையா இருக்கு?’ எனக் குழப்பமா...?. குழப்பமெல்லாம் வேண்டாம். அதிபர் ஜோ பைடன் தனது பெர்சனல் விஷயமாக மருத்துவமனையில் சில மணி நேரங்கள் சிகிச்சையில் இருந்தார். அந்த நேரத்தில் மட்டும் பைடன் தனது பொறுப்புகளை துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் ஒப்படைத்து உள்ளார். சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் அவர் சிகிச்சை பெற்ற இந்த நேரத்தில் கமலா ஹாரிஸ் அந்த நாட்டின் அதிபராகப் பதவி வகித்தார். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் இது வரை இல்லாத வகையாக அதன் முதல் பெண் அதிபராக கமலா பதவி வகித்தார். 






அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வருடாந்திர கொலானோஸ்கோபி என்னும் ஆசனவாய்க்கான பரிசோதனை சிகிச்சையை அமெரிக்க நேரப்படி இன்று காலை 10 மணிக்கு வால்டர் ரீட் மெடிக்கல் சென்டரில் எடுத்துக்கொண்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவருக்கு அந்த சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீண்ட அந்த சிகிச்சைக்கு முன்பு கமலா ஹாரிஸிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். சிகிச்சை முடிந்து மீண்டும் 11:30 மணிக்கு தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார் பைடன். 






 இந்த சிகிச்சை நேரத்தில் கமலா ஹாரிஸ் நாட்டின் அதிபராகப் பதவி வகித்தார். இது அமெரிக்க வரலாற்றில் பெண்கள் பெருமைகொள்ள வேண்டிய தருணம் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புச் செயலாளர் ஜென் ச்ஸாகி தெரிவித்துள்ளார். 


மேலும் கொலானோஸ்கோபி சிகிச்சை நல்ல முறையில் முடிந்ததாகவும் வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.