சீன உளவு பலூன் என சொல்லப்பட்டு வந்த ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதையடுத்து அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.
சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆறே நாள்களில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வானில் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த மர்ம பொருளையும் அமெரிக்க ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தியது.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "புதிய பொருள் எதற்காக பறந்து கொண்டிருந்தது அல்லது அது எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், 40,000 அடி உயரத்தில் மிதந்த அந்த பொருள் சிவில் விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் உத்தரவிட்டிருந்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த வாரம் அமெரிக்கா வானில் பறந்த ஒரு பெரிய சீன பலூனை விட இந்த பொருள் மிகவும் சிறியதாக இருந்தது. சனிக்கிழமையன்று அட்லாண்டிக் கடற்கரையில் அமெரிக்க போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அது தோராயமாக ஒரு சிறிய காரின் அளவில் இருந்தது.
அரசுக்குச் சொந்தமானதா அல்லது கார்ப்பரேட்டுக்குச் சொந்தமானதா யாருக்கு சொந்தமானது என்பது எங்களுக்குத் தெரியாது. அதன் முழு நோக்கமும் எங்களுக்குப் புரியவில்லை" என்றார்.
இது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அந்த பொருள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டது" என பதில் அளித்கார்.
இதுகுறித்து பென்டகன் (அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமை) செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில், "F-22 ராப்டார் விமானத்தில் AIM-9X ஏவுகணையை கொண்டு அந்த பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்த பயன்படுத்திய அதே விமானம் அதே ஏவுகணை" என்றார்.
உலகம் முழுவதும் உளவு தகவல்களை சேகரிக்க சீனா பலூனை பயன்படுத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தகைய பலூன்கள் 40 நாடுகளின் வானின் மேல் பறந்துள்ளன. இதற்கு முன்பு குறைந்தபட்சம் நான்கு முறையாவது அமெரிக்க வானில் பறந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்னதாக, சீன பலூன் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்து. அதாவது, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை டார்கெட் செய்தே சீனா அந்த உளவு பலூனை இயக்கியதாக செய்தி வெளியானது. சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் பற்றிய பல்வேறு தகவல்களை இந்தியா உள்பட நட்பு மற்றும் கூட்டு நாடுகளிடம் அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.