பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 


பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை அங்கு பெய்த மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பயிர் சாகுபடி 80 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டது. இதனால் பல நகரங்களில் மக்கள் உணவு பொருட்களுக்காக அடித்துக் கொள்ளும் நிலையில் என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது. பயிர் சாகுபடி பாதிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை தொட்டது. 


குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட எரிபொருட்களின் விலையும் உச்சம் தொட்டு வருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அந்நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் எரிபொருள் விலையை ஒரே நாளில் ரூ.35 உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.249.80 ஆகவும், டீசல் விலை ரூ. 262.80 ஆகவும் உள்ளது. மேலும் பிப்ரவரி மாத மத்தியில் மீண்டும் விலையேறக்கூடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் எரிபொருளுக்காக வாகனங்கள் பல கிலோமீட்டார் வரிசையில் நிற்கின்றன. பல இடங்களில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டது. 






கிராமப்புறங்கள், சிறிய நகரங்களில் பல மாதங்களாக ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பெரிய மாநகரங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரபல ஊடகம் வெளியிட்ட செய்தியில், லாகூரில் உள்ள 450 பெட்ரோல் நிலையங்களில் 70 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற பெட்ரோல் நிலையங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் விற்கப்படுவதில்லை என சொல்லப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 


இதற்கிடையில்  பாகிஸ்தான் பெட்ரோலிய பொருட்களுக்கான வினியோகஸ்தர்கள் சங்கம்,  எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் முறையாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை விநியோகம் செய்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளது. இதனை மறுத்த எண்ணெய் நிறுவனங்கள் சிலர் எரிபொருள்களை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.