அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடுநிலைப் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவனுடன் சுமார் 2 மாதங்களாகப் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். 


அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஹியாலேஹ் நடுநிலைப்பள்ளியில் நாடகத்துறை ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் 31 வயதான பிரிட்டினி லோபஸ் முர்ரே. அவர் தற்போது மியாமி டாடே சிறையில் பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மானபங்கப்படுத்துதல், குழந்தையோடு அத்துமீறி உறவுகொள்ளுதல் முதலான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்ளோரிடா மாகாணத்தில் சிறாருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்குச் சுமார் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். 



கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் பிரிட்டினி மீது எந்தப் புகாரும் இதுவரை எழுந்ததில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு, `சிறந்த புதிய ஆசிரியர்’ என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் பாதிக்கப்பட்ட மாணவன் பிரிட்டினியின் வகுப்பில் பயின்றவர்  என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனுக்கும், ஆசிரியைக்கும் இடையில் தவறான மெசேஜ்கள் அனுப்பப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்த அவனது சகோதரி, இந்த விவகாரத்தை அவரின் தந்தையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.


பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பிரிட்டினியின் அந்தரங்கப் புகைப்படங்கள் மாணவனுக்கு அனுப்பப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் அவர் புகாரளிக்க, காவல்துறையினர் மாணவனை விசாரித்ததில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன. 


கடந்த ஆகஸ்ட் மாதம், தன்னிடம் தனது ஆசிரியை விருப்பம் தெரிவித்ததாகவும், அதன்பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து, பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஹியாலேஹ் நடுநிலைப்பள்ளியின் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



`நகரத்தின் அறம்சார்ந்த நடத்தை விதிமுறைகளின்படி, எங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் கடும் முயற்சிக்குப் பிறகும், சில தனி நபர்களின் தவறான நடத்தை வெளிப்பட்டிருப்பது துரதிருஷ்டமானது. தற்போது காவல்துறையால் பிரிட்டினி கைது செய்யப்பட்டிருப்பதால், அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் அவரால் இந்த மாநகரத்தில் எங்கேயும் பணிசெய்ய முடியாது என்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம்’ என்று ஹியாலேஹ் நடுநிலைப்பள்ளியின் தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


கடந்த வாரம், அமெரிக்காவின் நடுவண் நீதிமன்றம் இதுபோன்ற பாலியல் அத்துமீறல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவருக்குப் பள்ளியின் சார்பில் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாகப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜேசன் எட்வார்ட் மேயர்ஸ் என்பவர், சுமார் 8 மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஜேசன் மீதான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.