‛பறவையை கண்டான்... விமானம் படைத்தான்...’ என பாடி, விமான கண்டுபிடிப்பை நாம் சிலாகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாருங்கள், விமானங்கள் சில நேரங்களில், நம்மூர் டவுன் பஸ்ஸை விட மோசமான நிலைக்கு வந்துவிடுகிறது. உச்சபட்ச ஆடம்பர போக்குவரத்தாக பார்க்கப்படும் விமான போக்குவரத்தில், பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். ஆனால், அது விமானத்தின் வெளியே நடைபெறும் சூழலில் மட்டுமல்ல, விமானத்தின் உள்ளேயும், நடக்கும் போது தான், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 


இப்போது நாம் பார்க்கும் இந்த விமானத்தில், அனைத்து சீட்டுகளும் நிரம்ப, பயணிகளோடு நடுவானில் பறந்து கொண்டிருக்கிறது. திடீரென விமான மேல் பாகம் ஒன்று, பயணிகள் மீது கழன்ற விழுகிறது. விமானத்தை நிறுத்திவிட்டு அதை பொருத்த முடியாது. விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, அதை சரி செய்வது என்பதும் நடக்காத காரியம். 


வேறு என்ன செய்வது, ‛வானத்தைப் போல’ விஜய்" data-type="interlinkingkeywords">விஜயகாந்த போல, அந்த பாகத்தை கைகளால் ஏந்திய படி பயணித்திருக்கிறார்கள் அந்த பயணிகள். எஸ்.ஏ.ராஜ்குமார் இருந்திருந்தால், அதற்கும் பின்னணி இசை அமைத்திருப்பார். அந்த அளவில் தான், அந்த சம்பவத்தை பார்க்கும் போது இருந்தது. விமானத்தில், ஒரு சிறு கீறல் வந்தால் கூட அதை முழு சோதனைக்கு உட்படுத்தும் நிர்வாகங்கள், இது மாதிரி, ‛டோப்பா’ கழன்று விழும் அளவிற்கு சூழல் ஏற்படும் அளவிற்கு அலட்சியம் காட்டியது எப்படியோ? 



‛உங்க விமானத்தில் வந்து ஒரு குத்தமாடா...’ என்பதைப் போல, காசு கொடுத்து பயணித்தவர்கள், கை வலிக்க , அந்த பாகத்தை தாங்கிய படி தங்கள் பயணத்தை முடித்தனர். இதை விமானங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிடும் தனியார் அமைப்பு ஒன்று, இந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதில் விசேசம் என்னவென்றால், இது போல் அனுபவம் பலருக்கு இருந்திருக்கும் போல, ‛இது அந்த விமான நிறுவனம் தானே?’ என்று , கிண்டலடித்து சிலர் பதில் பதிவு போட்டு வருகின்றனர். 


‛ஆமாம்... விமானத்தில் குளிர்பானங்கள், டீ, காபி கொடுத்திருப்பார்களே... பாவம் இந்த பயணிகள் அதை எப்படி தங்கள் கைகளால் வாங்கி பருகி இருப்பார்கள்?’ என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. என்ன செய்ய, தங்கள் பயணிகளுக்கு இலவச உடற்பயிற்சி வழங்கிய இந்த விமான சேவையை , சக பயணிகள் வஞ்சப்புகழ்ச்சியாக புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இந்த சம்பவம் எந்த நாட்டில் நடந்தது, எந்த விமானத்தில் நடந்தது என்கிற தகவலை அவர்கள் பதிவிடவில்லை. அதே நேரத்தில், இதை சீரியஸாகவும் அவர்கள் எடுக்கவில்லை. காமெடியாக பகிர்ந்தாலும், விசயம் என்னவோ, நம்மைப் பொருத்தவரை சீரியஸ் தான்.