ஈரான் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் நர்கீஸ் முகமதி, கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை சிறையில் கழித்தவர். இவருக்கு, இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராடி சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு, நான்கு முறை இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1935ஆம் ஆண்டு: கார்ல் வான் ஒசிட்ஸ்கி, ஜெர்மனி:
பத்திரிக்கையாளரும் உலக அமைதிக்காக போராடியவருமான கார்ல் வான் ஒசிட்ஸ்கி, கடந்த 1935 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றபோது நாஜி வதை முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தார். விருதை வாங்க அவரால் ஒஸ்லோவிற்கு பயணம் செய்ய முடியவில்லை.
இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான், அடோல்ஃப் ஹிட்லருக்கு எதிரிகளாக கருதப்பட்டவர்கள் மீதான நடவடிக்கையின் போது, அவர் கைது செய்யப்பட்டார். நோர்வே நோபல் கமிட்டியின் முடிவால் கோபமடைந்த அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மன் மக்கள் நோபல் பரிசை பெற்று கொள்வதற்கு தடை விதித்தார். கடந்த 1938ஆம் ஆண்டு, சிறையில் இருக்கும்போதே ஒசிட்ஸ்கி மரணம் அடைந்தார்.
1991ஆம் ஆண்டு: ஆங் சான் சூகி, மியான்மர்
மியான்மரில் ஆட்சி அதிகாரத்தில் அகற்றப்பட்டவரும், ஜனநாயகத்திற்காக தொடர்ந்து போராடியவருமான ஆங் சான் சூகிக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ஜனநாயக உரிமைகளுக்காக போராடியவர்கள் மீது அந்நாட்டின் ராணுவம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. அதன் ஒரு பகுதியாக, அவர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.
1991ஆம் ஆண்டு, நோபல் பரிசு விழாவில் இவருக்கு பதிலாக அவரது இரண்டு மகன்கள் மற்றும் அவரது கணவரும் பரிசை பெற்று கொண்டார்கள். வீட்டு காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி, விருது வழங்கும் விழாவுக்கு வராததை குறிக்க ஒரு வெற்று நாற்காலி மேடையில் வைக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு: லியு சியாபோ, சீனா
சீன அரசை எதிர்த்து குரல் கொடுத்து வந்த லியு சியாபோ சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2010ஆம் ஆண்டு, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இவர் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்து இவரது மனைவி லியு சியா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரது மூன்று சகோதரர்கள் சீனாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக சிறையிலிருந்து சீன மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர், 2017ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
2022: அலெஸ் பியாலியாட்ஸ்கி, பெலாரஸ்
கடந்த 2021ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
போர்க்குற்றங்கள் மற்றும் உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு, ரஷ்ய மெமோரியல் குரூப், உக்ரைன் நாட்டின் சிவில் உரிமைகளுக்கான மையம், அலெஸ் பியாலியாட்ஸ்கி ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் தூதரக உறவை மேம்படுத்தியதற்கும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அசாதாரண முயற்சிகளை எடுத்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மற்ற குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (2002); குழந்தை கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆர்வலர் மலாலா (2014 பகிரப்பட்டது); ஐரோப்பிய ஒன்றியம் (2012); ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (2001 பகிரப்பட்டது ); மற்றும் புனித தெரசா (1979) ஆகியோரும் அடங்குவர்.