நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், அமைதியை நிலைநாட்டுதல் ஆகிய காரணங்களுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஈரானில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதை எதிர்த்து போராடிய மனித உரிமைகள் ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த நர்கீஸ் முகமதி:
அனைவருக்குமான சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் நர்கீஸ் முகமதி. அவரின் துணிச்சலான போராட்டத்தின் காரணமாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் நிறைய விஷயங்களை இழக்க நேர்ந்தது. ஈரான் அரசாங்கம் அவரை 13 முறை கைது செய்துள்ளது. ஐந்து முறை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
அவருக்கு 31 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 154 முறை கசையடி வழங்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கூட, முகமதி சிறையில்தான் இருக்கிறார். 1990களில், இயற்பியல் மாணவராக இருக்கும்போதே, சமத்துவத்திற்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவராக நர்கீஸ் முகமதி உருவெடுத்தார்.
மரண தண்டனைக்கு எதிரான தீவிரமான பிரச்சாரம்:
தனது படிப்பை முடித்த பிறகு, பொறியாளராகவும், பல்வேறு சீர்திருத்த சிந்தனை கொண்ட செய்தித்தாள்களில் கட்டுரையாளராகவும் அவர் பணியாற்றினார். 2003 ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஷிரின் எபாடியால் தொடங்கப்பட்ட மனித உரிமைகள் பாதுகாவலர் மையத்துடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.
மரண தண்டனைக்கு எதிராக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ள தொடங்கினார். அரசியல் கைதிகள், குறிப்பாக பெண் அரசியல் கைதிகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்.
அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்கள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் தூதரக உறவை மேம்படுத்தியதற்கும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அசாதாரண முயற்சிகளை எடுத்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மற்ற குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (2002); குழந்தை கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆர்வலர் மலாலா (2014 பகிரப்பட்டது); ஐரோப்பிய ஒன்றியம் (2012); ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (2001 பகிரப்பட்டது ); மற்றும் புனித தெரசா (1979) ஆகியோரும் அடங்குவர்.
நோபல் பரிசின் வரலாறு:
கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் (டைனமைட்டைக் கண்டுபிடித்தவர்) ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார்.
அறிவு, அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.
இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.