மனிதர்களின் பேராசை காரணமாக உலகம் தொடர்ந்து மோசமான பாதிப்பை எதிர் கொண்டு வருகிறது. ஏற்கனவே, பல உயிரினங்கள் மனிதனின் பேராசையால் உலகில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்து போயுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் காரணமாக அனைத்து வகையான உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலை ஏற்கனவே உருவாகிவிட்டது. ஆனால் இவ்வளவு பிளாஸ்டிக் உருவாக்கமும் பூமியில் என்னமாதிரியான விளைவுகளை விளைவிக்கின்றன என்பது குறித்த எதையும் நாம் அறிந்துகொள்வதில்லை. 


எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக்


இப்படி மனிதனின் வசதிக்காக நாம் உருவாக்கி விட்டுள்ள இந்த பிளாஸ்டிக் என்னும் அரக்கன் இல்லாத இடமே இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்தே ஆய்வாளர்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அண்டார்டிகா


அண்டார்டிக்காவில் பனிப்பாறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது பனி உருகுவதை வேகப்படுத்துவது மட்டுமின்றி, உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் எனவும் அச்சுறுத்துகிறது. அண்டார்டிக் பனியில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிவது உலகின் தொலைதூரப் பகுதியும் கூட பிளாஸ்டிக்கால் மாசடைந்து உள்ளதையே காட்டுகிறது என்கிறார் ஆய்வாளர்.


ஆய்வில் கண்டறியப்பட்டது


நியூசிலாந்தில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகத்தின் மாணவர் அலெக்ஸ் ஏவ்ஸ், 2019இல் அண்டார்டிக்காவில் உள்ள ராஸ் ஐஸ் ஷெல்ஃப் முழுவதும் 19 இடங்களில் இருந்து பனி மாதிரிகளைச் சேகரித்தார். அந்த மாதிரிகளில் தான் ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு சராசரியாக 29 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பிளாஸ்டிக் மாசின் தீவிர தன்மை உணர்த்துவதாக உள்ளது.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


புதிதாக விழுந்த பனியில் முதல்முறை


இதற்கு முன்னதாக கடலின் ஆழமான பகுதிகளிலும், ஆர்க்டிக் பனிக்கட்டிகளிலும் மைக்ரோ பிளாஸ்டி துகள்கள் காணப்பட்டன. ஆனால் இதுவரை புதிதாக விழுந்த பனியில் கண்டறியப்பட்டது இல்லை. இப்போது தான் முதல்முறையாகப் புதிதாக விழுந்த பனியில் அண்டார்டிக்காவில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 13 வகையான பிளாஸ்டிக் மாசு தான் அதிகம் காணப்படுகிறது. அதில் கூல் டிரிங்கஸ் தயாரிக்கப் பயன்படும் PET பாட்டில்களே அதிக மாசை ஏற்படுத்துகிறது.


இதனால் என்ன பாதிப்பு?


பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களைக் குப்பைகளை ஏற்படுத்துவது மட்டுமில்லை. அது புவி வெப்ப மயமாதலுக்குக் காரணமான கிரீன் ஹவுஸ் கேஸ்களையும் வெளியேற்றுகிறது. இது மனிதர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.



எப்படி வந்திருக்கும்?


மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காற்றில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, அண்டார்டிக்காவுக்கு வந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்போது மனிதர்களால் ஏற்படும் மாசு காரணமாக விலங்குகள் உட்பட எந்தவொரு உயிரினமும் தப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பிளாஸ்டிக் மாசை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து உடனடியாக நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்ற மாதமும் அதிகரித்துள்ளது.


பிளாஸ்டிக் தயாரிப்பு


1950களில் இருந்து, சுமார் 8.3 பில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை நிலப்பரப்புகளில் ஆறுகளில் பெருங்கடல்களில் கொட்டப்பட்டன. 2019இல் மட்டும் சுமார் 460 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது, இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.