கோமாவிலிருந்து எழுந்த பிறகு, நம்மை காதலித்த நபர் நம்முடன் இல்லை என்றால் எப்படி இருக்கும். மனதே உடைந்துவிடும் அல்லவா? கண்டிப்பாக மனது உடைந்தே போய்விடும். நான்கு வாரங்களுக்கு பிறகு கோமாவிலிருந்து எழுந்த பெண்ணுக்கு அப்படிதான் இருந்திருக்கும்.


ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ப்ரி டுவால் என்ற பெண் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து கனடாவுக்கு சென்று பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நான்கு ஆண்டுகளாக காதலருடன் வசித்து இருந்துள்ளார்.



ஆனால், அனைத்துமே ஆகஸ்ட் மாதம் தலைகீழாக மாறியுள்ளது. நண்பர்களுடன் இறவில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, நடைபாதையிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். முடிவு பெறாத கட்டட பணிகள் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளது.


விபத்தில் சிக்கிய அவர் ஆல்பர்ட் மருத்துவமனைக்கு விமானத்தின் மூலம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. பல இடங்களில் எலும்பு முறிந்தது தெரியவந்துள்ளது. நான்கு வாரங்களுக்கு கோமாவில் இருந்துள்ளார். உயிர் பிழைப்பதற்கு அவருக்கு 10 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரின் பெற்றோர் நம்பிக்கையை இழக்கவில்லை. இதன் காரணமாக, மூன்றே வாரங்களில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  



இறுதியில், கண் முழித்த அவர் சிறிது நினைவை இழந்துள்ளார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அவரின் நினைவு திரும்பியது. தனது செல்போனை வாங்கி பார்த்தபோதுதான், நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த காதலர் சமூகவலைதளங்களில் பிளாக் செய்துள்ளது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, அவர் வேறு ஒருவரை காதலித்து வந்தது தெரியவந்தது. 


இதுகுறித்து அவர் பேசுகையில், "இறுதியாக எனது தொலைபேசி எனக்கு அளிக்கப்பட்டது. எனது முதல் எண்ணம் அவரை அழைத்து என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியுமா என்று கேட்பதுதான். அவர் என்னைப் பார்க்க வரவில்லை. எனவே, அவருக்கு மெசேஜ் அனுப்புவதற்காக எனது மொபைலைத் திறந்தேன். 




அப்போது, உங்களுடைய காதலருடன் இருக்கிறேன் என்று ஒரு பெண்ணிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. ​​உங்களின் நினைவிலிருந்து அவரை கடத்திவிட்டேன் என அவர் சொன்னார். அவர் இப்போது என்னுடனும் என் மகனுடனும் வசிக்கிறார். தயவுசெய்து அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்டார். 


நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து அவர் என்னிடம் பேசவே இல்லை. அவர் என்னை முழுமையாகவும் கை விட்டுவிட்டார். எனவே இது ஏன் நடந்தது என்பது கூட எனக்கு தெரியாது" என்றார். இதை விட சோகமான விஷயம் என்னவென்றால், கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், பெற்றோரை கூட அவரால் பார்க்க முடியவில்லை.