எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள காப்டிக் கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தேவாலய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 14 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரிலிருந்து வடமேற்கில் அமைந்துள்ள இம்பாபாவில் உள்ள அபு சிஃபின் தேவாலயத்தில் தீப்பிடித்ததன் காரணம் குறித்து தெரியவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். தொழிலாளர் வர்க்கம் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாக இம்பாலா மாவட்டம் உள்ளது.
எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் அனைத்து அரசு துறைகளையும் அணிதிரட்டியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
எகிப்தின் 103 மில்லியன் மக்களில் குறைந்தது 10 மில்லியனைக் கொண்ட மத்திய கிழக்கின் மிகப்பெரிய கிறிஸ்தவ சமூகம் காப்ட்ஸ் ஆகும். இங்கு, சிறுபான்மையினர் தாக்குதல்களுக்கு ஆளாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அரபு உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட வட ஆப்பிரிக்க நாடான எகிப்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பாகுபாடு காட்டுவதாக சிறுபான்மையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இஸ்லாமியர்களால் கோப்ட்ஸ் பிரிவினர் பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, 2013இல் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த முன்னாள் அதிபர் மொஹமட் மோர்சியை அவரது பதவியிலிருந்து சிசி அகற்றிய பின்னர், தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் காப்டிக் கிறிஸ்மஸ் பண்டிகையில் கலந்துகொள்ளும் முதல் எகிப்திய அதிபரான சிசி, வரலாற்றில் முதல்முறையாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைவராக காப்டிக் பிரிவை சேர்ந்தவரை சமீபத்தில் நியமித்தார்.
சமீப ஆண்டுகளாகவே எகிப்தில் பல கொடிய தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மார்ச் 2021இல், கெய்ரோவின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஜவுளித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் இறந்தனர். 2020 ஆம் ஆண்டில், இரண்டு மருத்துவமனை தீ விபத்துகளில் 14 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்