நார்வே நாட்டைச் சேர்ந்த யூட்யூப் பிரபலம் ஒருவர் தனது 57வது வயதில் உயிரிழந்துள்ளார். அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று மட்டும் யூட்யூப் தளத்தில் `நான் இன்னும் சாகவில்லை’ என்று பதிவுசெய்து, அதன்மூலம் பிரபலமானவர். அவருக்கு மொத்தமாக 10 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருந்துள்ளனர். 


டார் எக்காப் என்ற இந்த யூட்யூப் பிரபலம் `ஏப்டார்’ என்ற பெயரில் யூட்யூப் தளத்தில் தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் `நான் இன்னும் சாகவில்லை’ என்று பதிவிடும் வழக்கம் கொண்டவர். நார்வே நாட்டின் கோங்க்ஸ்பெர்க் பகுதியில் உள்ள ஜேக்கப்ஸ் அணையில் இருந்த ஐஸ் கட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். 



இதுகுறித்து நார்வே செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் அளித்துள்ள அவரது துணைவி டோவ் ஸ்கெர்வேன், `நாங்கள் அவரை அதிகமாக நினைத்துப் பார்க்கிறோம். இது ஈடு செய்யவே முடியாத இழப்பு. எனக்கும் எனது மகனுக்கும் எல்லாமுமாக இருந்தவர் அவர்தான்’ என்று கூறியுள்ளார். 


தொடர்ந்து அவர் டார் எக்காபின் மரணம் குறித்து பேஸ்புக் தளத்தில், `என் அன்புள்ள டார், கடந்த நவம்பர் 26 மற்றொரு சாதாரண வெள்ளிக்கிழமையாகவே இருந்தது. கோங்க்ஸ்பெர்க் பகுதியில் இருந்த நீர்ப் பகுதிக்கு ஸ்கேட்டிங் செய்வதற்காக நீ சென்றாய். அங்கு கொஞ்சம் வீடியோ எடுத்தால், அதனை யூட்யூபில் பதிவேற்றும் ஆர்வமும் உனக்கு இருந்தது. நீ அங்கு சென்றதை எனக்குப் படம் எடுத்து அனுப்பிக் கூறினாய். ஆனால் ஏதோ ஒன்று தவறாக நடந்துவிட்டது. நீ ஐஸ் கட்டிக்குள் விழுந்த போது, உனக்கு உதவி செய்வதற்காக யாரும் இல்லை. இறுதியில் நீ காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாய். உன்னை மீண்டும் உயிருடன் கொண்டு வர, அங்கு எவ்வளவோ பாடுபட்டார்கள். எனினும் நீ நீருக்கடியில் அதிக நேரம் இருந்ததால் உன்னைக் காப்பாற்ற முடியவில்லை’ என்று உருக்கமாக எழுதியுள்ளார். 



ரசிகர்கள் அஞ்சலி


 


டார் எக்காப் மறைவதற்குச் சில நாள்களுக்கு முன் தனது 57வது பிறந்தநாள் வீடியோவைப் பதிவேற்றினார். அதில் அவர் `நான் சாகவில்லை. எனக்கு இன்று 57 வயது ஆகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவில் நெற்றியில் `57’ என்று எழுதப்பட்டு, அவர் வோட்காவைக் குடிப்பதாகப் பதிவேற்றப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், இவ்வாறு `நான் இன்னும் சாகவில்லை’ என்று வீடியோ எடுத்துப் பதிவேற்றுவது டார் எக்காபின் வழக்கம்.


மறைந்த யூட்யூப் பிரபலம் டார் எக்காபிற்காக அவரது சப்ஸ்க்ரைபர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.