ஒரு காலத்தில் பெண்களுக்கு எதிராகவும் பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் அவலங்கள் அரங்கேறி வந்தன. பல குடும்பங்களில் பெண் குழந்தைகள் என்றால் வேண்டாம் என்ற சூழலே இருந்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் பெணகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறி வந்தது. இன்றும் பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும், கடந்த காலத்தை காட்டிலும் குறைந்துள்ளது.


பெண் குழந்தை:


சமீபகாலத்தில் பெண் குழந்தைகளை விரும்பும் பெற்றோர்களும் அதிகரித்துள்ளனர். நீண்ட காலமாக ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறக்கவே இல்லை என்றால், அந்த குடும்பத்தினர் கவலை கொள்கின்றனர். இந்த நிலையில், ஒரு குடும்பத்தில் சுமார் 130 ஆண்டுகளுக்கு பிறகு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், அந்த குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ கிளார்க். இவரது தந்தை வழி தலைமுறையில் கடைசியாக 1885ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு பிறகு சுமார் 147 ஆண்டுகளாக அவர்களது தலைமுறையில் நேரடியாக பெண்குழந்தை என்பது பிறக்கவே இல்லை. இந்த சூழலில், கடந்த 2021ம் ஆண்டு கிளார்க்கின் மனைவி கேரலின் கிளார்க் கருவுற்றார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த கரு கலைந்தது. அந்த சம்பவம் அவர்களை பாதித்த நிலையில்தான் மீண்டும் கேரலின் கருவுற்றார்.


147 ஆண்டுகள்:


இந்த நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கேரலின் கிளார்க் குழந்தை பிறக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியிலே நாங்கள் இருந்தோம். ஆணாகவும். பெண்ணாகவும் இருக்க 50 சதவீதம் வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தோம். மேலும், அவர்களது குடும்பத்தில் சுமார் 147 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்திருப்பது குறித்து பேசிய கேரலின், தனது கணவனின் உறவினர்கள் மற்றும் பலரிடம் விசாரித்தபோது நேரடி தலைமுறையில் பெண் குழந்தைகள் இல்லை என்பதை உறுதி செய்தோம். இறுதியாக அவள் பிறந்துவிட்டாள் என்றும் கூறினார். இதுகுறித்து பேசிய கிளார்க் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


147 ஆண்டுகளாக நேரடியாக தங்களது தலைமுறையில் பெண் குழந்தையே பிறக்காத சூழலில், தற்போது பெண் குழந்தை பிறந்திருப்பதை அந்த குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பெண் குழந்தை பிறந்ததை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரு குடும்பமே கொண்டாடுவது மிகுந்த ஆரோக்கிமான போக்காகும். இந்தியாவிலும் இன்று பல குடும்பத்தினர் பெண் குழந்தைகளின் பிறப்பை சிறப்பாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்: மஸ்க், முகேஷ் அம்பானிக்கு எந்த இடம்?


மேலும் படிக்க:  Donald Trump: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் .. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது