கடந்த 1996 முதல் 2001 ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்தபோது பெண்களின் சுதந்திரம் மிகவும் ஒடுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. அங்கு வசிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்பது கனவில் கூட நினைக்க முடியாதவையாகவும், 8 வயது முதலே பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும் போன்ற சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டது. 


ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்திற்கு வந்த தலிபான்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருந்து தடைகளை விதித்துள்ளனர்.


தாலிபான்கள் முதலில் பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு செல்ல தடை விதித்தனர்; டிசம்பர் 2022 இல், ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர்கல்வி மற்றும் தேசிய மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பணிபுரிவதை  தடை செய்தது. 


இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பணியுரியும் ஆப்கன் பெண் ஊழியர்களை பணிபுரிய  தலிபான்கள் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 


ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு நங்கர்ஹர் மாகாணத்தில் இருந்த ஐநா தூரதரகத்திற்கு பணிபுரிய வந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, ஐநா தூதரகம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. 






இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் ஆப்கானிஸ்தான் பெண் தோழிகள் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் பணிபுரிய தடை விதித்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  ஆப்கானிஸ்தானில் மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிருக்கு போராடும்போது பெண் தொழிலாளர்கள் மீதான தடையானது உயிர்காக்கும் உதவிகளை தடுக்கும்” என்றார். 


தொடர்ந்து ஐநா சார்பில் வெளியான அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை, பெண் தேசிய ஐ.நா ஊழியர்கள் நங்கர்ஹர் மாகாணத்தில் பணிக்கு வருவதைத் தலிபான்கள் தடுப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. சர்வதேச அமைப்பின் பெரும்பாலான ஊழியர்கள் பெண்களாக இருப்பதால், பெண் ஊழியர்கள் இல்லாமல் உயிர்காக்கும் சூழ்நிலையில் அவர்களின் உயிரை ஆபத்தில் தள்ளும்.” என்று தெரிவித்திருந்தது.