அபுதாபியில் ஜெய்சங்கர்:
அபுதாபியில் உள்ள இந்திய சா்வதேச மையத்தில் ‘இந்தியா -ஐக்கிய அரபு அமீரகம்: சா்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டாளிகள்’ என்ற தலைப்பில் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்தரங்கை அமைச்சா் ஜெய்சங்கா் தொடங்கி வைத்தார்.
உலகை பிளவுபடுத்தும் காரணங்கள்:
பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகமயமாக்கல் மற்றும் உலகில் அதன் தாக்கம், மறுசீரமைப்பு மற்றும் வெவ்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் இடையேயான சூழல் மற்றும் பலமுனை அல்லது கடந்த காலத்தின் வரலாற்றின் அடிப்படையில் மாறி வரும் உலகத்தைப் பார்ப்பதில் இருந்து விலகிச் செல்வது ஆகிய காரணங்கள் உலகையே பிளவுபடுத்துவதாக கூறினார். உலகமயமாக்கல் தீர்கமானதாக மாறும்போது, மறுசீரமைப்பு மற்றும் பெரிய அளவிலான பலமுனை வாய்ப்புகள் உருவாகும். இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பானது நூற்றாண்டுகள் பழமையான உள்ளுணர்வு கொண்ட சுமூகமான உறவு என குறிப்பிட்டார்.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவு:
இந்தியாவின் முன்றாவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாகவும், இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான இந்தியா்கள் வசித்து வருகின்றனா். வா்த்தகமாக இருந்தாலும், மக்களுடனான
தொடா்பாக இருந்தாலும் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
வேகமாக வளரும் நல்லுறவு:
ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பிரதமா் நரேந்தி ர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டில் வருகை தந்தாா். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமா் அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டது அதுவே முதல் முறை . அவரது வருகைக்குப் பிறகு இந்தியா - ஐக்கிய அமீரக அரபு நாடு இடையேயான நல்லுறவு வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதோடு, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகமும், முதலீடுகளும் அதிகரித்துள்ளன. விண்வெளி , கல்வி , செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், புத்தாக்க நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு வலுவடைந்துள்ளது. இருநாடுகளுக்கு இடையே கையொப்பமான வா்த்தக ஒப்பந்தம், இருதரப்பு நல்லுறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மேலும் பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்துடனான நல்லுறவுக்கு இந்தியா தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு பன்னெடுங்காலமாகவே தொடா்ந்து வருகிறது. இந்த உறவு மறுசீரமைக்கப்பட்டு, எதிர்வரும் காலங்களில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.பல்வேறு சர்வதேச கூட்டாளிகளுடனும் இந்த உறவு விரிவுபடுத்தப்படும். இருநாடுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாகவும் தெளிவாகவும் உள்ளது என்றும் ஜெய்சங்கர் பேசினார்.