நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகும் சூழலில், பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் ஒருவர்கூட 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யமுடியவில்லை. நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் ஆகியோராவது 5 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பை நிறைவு செய்வர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை பொய்த்துப் போயுள்ளன.


பாகிஸ்தான் பிரதமர்களின் வரலாறு


1947-ல் நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தானிலும் பிரதமராக லியாகத் அலி கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் நாட்டின் முதல் பிரதமர், 4 ஆண்டுகள் 63 நாட்கள் ஆட்சி செய்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முஸ்லிம் லீக் மற்றும் பிற கட்சிகளுக்கு (அவாமி லீக், குடியரசுக் கட்சி) இடையிலான மோதலில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 பிரதமர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, மாற்றப்பட்டனர். 


 



லியாகத் அலி கான்


நெடுங்காலம் நீடித்த ராணுவ ஆட்சி


1958 முதல் 1973 வரையிலான காலகட்டத்தில், இரண்டு முறை ராணுவ ஆட்சி அமலில் இருந்தது. இதற்கிடையே 1957-ல் இப்ராஹிம் இஸ்மாயில் சுந்திரிகர் என்னும் பிரதமர் 60 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். பிற கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால், அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.


13 நாட்கள் பிரதமர்


அவரை அடுத்து பிரதமர் பதவிக்கு வந்த ஃபெரோஸ் கான் நூன், 295 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். அதைத் தொடர்ந்து 1971-ல் பிரதமரான நூருல் அமின், வெறும் 13 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். 


 



நூருல் அமின்


மீண்டும் தேர்தல்


ராணுவ ஆட்சிக்குப் பிறகு 1973-ல் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இதில் சுல்ஃபிகர் அலி பூட்டோ, பிரதமர் ஆனார். 4 ஆண்டுகள்கூட முடிவடையாத சூழலில், அவரால் நியமிக்கப்பட்ட ராணுவத் தலைவர் முகமது அலி ஜியாவாலேயே பதவி  நீக்கம் செய்யப்பட்டார். 1977-ல் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். 


அதைத் தொடர்ந்து 1985-ல் அனைத்துக் கட்சிகள் சேர்ந்து பிரதமர் ஆக்கிய முகமது கான் ஜூனஜோவாலும் 3 ஆண்டுகள் 2 மாதங்கள்தான் ஆட்சியில் தாக்குப்பிடிக்க முடிந்தது. 


சுல்ஃபிகர் அலி பூட்டோ படுகொலைக்குப் பிறகு, அவரின் மகளான பெனாசிர் பூட்டோ 1988-ல் ஆட்சியைப் பிடித்தார். அவர்தான் பாகிஸ்தான் நாட்டின் இதுநாள் வரையிலான ஒரே பெண் பிரதமர். மீண்டும் ஒருமுறை அவரால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தாலும், முழுமையாக அவரால் ஆட்சியை நிறைவு செய்ய முடியவில்லை. 2007-ல் பெனாசிரும் படுகொலை செய்யப்பட்டார். 




10 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் 


2002 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் பிரதமர்கள் நியமிக்கப்படுவதும் பதவி நீக்கம் செய்யப்படுவதுமாக இருந்தனர். இதற்கு இடையில் 2013-ல் நவாஸ் ஷெரிஃப் 2ஆவது முறையாகப் பிரதமர் ஆனார். அவராலும் ஒருமுறை கூடப் பிரதமர் பதவியை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. அவர் 2ஆவது முறை பிரதமர் ஆகி, 4 ஆண்டுகள் 53 நாட்கள் ஆன நிலையில், பனாமா பேப்பர்ஸ் வழக்கில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 


அதிக காலம் ஆட்சியில் இருந்தவர்


பாகிஸ்தான் பிரதமர்கள் வரலாற்றிலேயே, 2008-ல் பதவியேறிய யூசுஃப் ராஸா கிலானிதான் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் 86 நாட்கள் ஆட்சியில் இருந்தார். 2012-ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரின் பதவியைப் பறித்தது.





இம்ரான் கான் சர்ச்சைகள்


2018-ல் தேர்தலைத் தொடர்ந்து இம்ரான் கான் பிரதமர் ஆனார். 342 இடங்கள் கொண்ட பாகிஸ்தானில், இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ - இன்சாஃப் கட்சி 156 இடங்களைப் பிடித்தது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் பிரதமர் ஆனார். எனினும் அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டன.


இம்ரான் கானைப் படுகொலை செய்யத் திட்டம்


எனினும் அதை துணை சபாநாயகர் நிராகரித்தார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி, அந்தத் தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகர், ஏப்ரல் 25ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.


எனினும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. இம்ரான் கானின் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானைப் படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.




வெளிநாட்டு சதி


இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் இம்ரான் கான், ''பாகிஸ்தான் அரசைக் கலைக்க வெளிநாட்டு சதி நடந்தது நிரூபணமாகியுள்ளது. எனவே,  விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆக உள்ள சூழலில், ஒரு பிரதமரால் கூட பாகிஸ்தானில் முழுமையாக ஆட்சி அமைக்க முடியாதது அந்நாட்டு ஜனநாயகத்தின் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.