இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் காலநிலை மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து திடீரென பாதியிலேயே வெளியேறினார்.
இது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாடு, எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் கலந்து கொண்டார்.
அவர், கிளாஸ்கோ காலநிலை ஒப்பந்தம் பற்றி உரையாற்றுவதுடன் பிற நாடுகளையும், அதில் இருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததன்படி அதனை பின்பற்றும்படி வலியுறுத்துவார் என்றும் இந்த பருவகால உச்சி மாநாட்டில், இங்கிலாந்து நாட்டை தூய்மையான ஆற்றல் கொண்ட ஒன்றாக உருவாக்கும் தனது நோக்கங்களை ரிஷி சுனக் வெளியிடுவார் என்றும் அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காலநிலை மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிஷி சுனக் திடீரென பாதியிலேயே வெளியேறினார். ஏன் இப்படி திடீரென வெளியேறினார் என்று தெரியாமல் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த கார்பன் பிரீஃப் அமைப்பின் இயக்குனர் லியோ ஹிக்மேன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பருவகால மாற்ற மாநாட்டின் மத்தியில் பிரதமர் ரிஷி சுனக் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார் என தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றில் கூறும்போது, சுனக் மேடையில் பேச தயாரானபோது, அவரது உதவியாளர்கள் மேடைக்கு வந்து அவரிடம் ஏதோ கூறினர். ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை உதவியாளர் ஒருவர், ரிஷி சுனக்கின் காதில் ஏதோ முணுமுணுத்தபடி காணப்பட்டார். இதுபற்றி அவர்கள் ஆலோசித்தது போல் தெரிகிறது. மேடையில் இருந்து செல்லலாமா? அல்லது வேண்டாமா? என்பது போல் அவர்கள் காணப்பட்டனர்.
எனினும் தொடர்ந்து மேடையிலேயே சுனக் நின்றார். இதனை தொடர்ந்து மற்றொரு உதவியாளர் உடனடியாக மேடைக்கு சென்று உடனே வெளியேறி செல்லும்படி சுனக்கை வற்புறுத்தி, அவரை அழைத்து சென்றார் என ஹிக்மேன் தெரிவித்து உள்ளார்.
இந்த மாநாட்டின் பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறியபோதும், அதற்கான தெளிவான காரணம் எதுவும் வெளிவரவில்லை. இதனால், உலக நாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக, கடந்த மாதம் 20ம் தேதி பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் (Liz Truss) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு யார் வருவார்? என்று எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் போட்டியிடுவதாக தகவல் வெளியாகின.
ட்விட்டர் ப்ளூ டிக்குக்கு கட்டணம்.. மஸ்குக்கு முட்டு கொடுக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன்! யார் இவர்?
ஆனால் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென விலகியதை அடுத்து, புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.