மத்திய ஆப்பிரிக்க நாடான ஈக்வடோரியல் கினியாவில் நடந்த மறு தேர்தலில் அந்நாட்டின் அதிபர் தியோடோரோ ஓபியாங் நுகுமா எம்பாசோகோ வெற்றி பெற்றுள்ளார்.


இதன் மூலம் தொடர்ந்து ஆறாவது முறையாக அவர் அதிபர் பதவி ஏற்க உள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிபராக பதவி வகிக்க போவதன் மூலம் உலகின் நீண்ட காலமாக அதிபராக பதவி வகித்தவர் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார்.


தேர்தல் நடந்து ஆறு நாள்கள் ஆன நிலையில், எம்பாசோகோவின் மகனும் துணை அதிபருமான தியோடோரோ ஓபியாங் நுகுமா மாங்காய் இந்த தகவலை நேற்று பகிர்ந்தார். மறு தேர்தலில் 95 சதவீத வாக்குகளைப் பெற்று 80 வயதான எம்பாசோகோ வெற்றி பெற்றுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 405,910 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். 


இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஃபாஸ்டினோ ஈசோனோ ஈயாங் கூறுகையில், "ஒபியாங் இன்னும் 7 ஆண்டுகள் அதிபராக பதவி வகிப்பார். தேர்தலில் 98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது" என்றார்.


எண்ணெய் வளம் அதிகமுள்ள ஈக்வடோரியல் கினியாவின் மக்கள் தொகை 15 லட்சம் ஆகும். தேர்தல் வெற்றி குறித்து துணை அதிபர் நுகுமா மாங்காய் கூறுகையில், "ஆளும் ஈக்குவடோரியல் கினியாவின் ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் கூட்டணி செனட்டில் 55 இடங்களையும், பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படும் கீழ் சபையில் 100 இடங்களையும் வென்றுள்ளது.


உறுதியான முடிவுகள் நாம் சரியானவர்கள் என்பதை நிரூபிக்கின்றன. நாங்கள் ஒரு சிறந்த அரசியல் கட்சி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். மீதமுள்ள 15 செனட் இடங்களை அதிபர் நியமிப்பார்" என்றார்.


கடந்த 1979ஆம் ஆண்டு, ராணுவ ஆட்சியை தொடர்ந்து, ஓபியாங் ஆட்சியை கைப்பற்றினார். அதற்கு பிறகு, ஆட்சியை கவிழ்க்க பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதை அனைத்தையும் முறியடித்து ஓபியாங் தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வருகிறார். ஈக்வடோரியல் கினியாவில் ஒரே ஒரு பிரதான எதிர்கட்சிதான் உள்ளது. பல ஆண்டுகளாக, 90 சதவிகித வாக்குகளை பெற்று ஓபியாங் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். ஓபியாங்கை எதிர்த்து பலர் இந்த முறை போட்டியிட்டனர். ஆனால், அவர்கள் தோல்வி அடைவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அரசின் முக்கிய பதவிகளில் ஓபியாங்கின் குடும்பத்தினரே உள்ளனர்.


ஈக்வடோரியல் கினியாவில் ஊடகங்கள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படுவதாகவும், போராட்டங்கள் பெரும்பாலும் தடைசெய்யப்படுவதாகவும், அரசியல் எதிரிகள் அடிக்கடி கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்நாட்டு அரசாங்கம் மரண தண்டனையை ரத்து செய்தது. இந்த முடிவை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியது.