ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக 40 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை செய்தித் தொடர்பாளர் மசூத் செத்தாயிஷ் கூறியுள்ளார்.


இஸ்லாமிய மதத்தை மிக தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் ஒன்று ஈரான். இங்கு 9 வயது பெண்கள் முதல் அனைத்து பெண்களும் இஸ்லாமிய மத அடிப்படைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  1979 நாட்டில் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் பெண்கள் அனைவரும் வெளியே செல்லும்போது தலை முதல் கழுத்துவரை மூடி இருக்க வேண்டும். அப்படி அணியவில்லை எனில் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டும் வந்தது. 


இந்த சூழலில், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற பெண் கடந்த செப்டம்பர் (13-ம் தேதி) தனது குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை காவல்துறை பிரிவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.


அந்த நேரத்தில், நெறிமுறை காவல்துறை பிரிவு மாஷா அமினியின் குடும்பத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டுள்ளது. அப்போது அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி அவரை கைது செய்து காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.


காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 16ஆம் தேதி மாஷா உயிரிழந்தார்.


இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த பெண்கள் மாஷாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தாரில் நடக்கும் ஃபிஃபா கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள ஈரான் அணி நேற்று தேசிய கீதம் பாட மறுத்து, தாங்கள் தங்கள் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தது.






இந்நிலையில் ஈரானில் இதுவரை ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக 40 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை செய்தித் தொடர்பாளர் மசூத் செத்தாயிஷ் கூறியுள்ளார். ஹிஜாப் அணிய மறுத்த ஈரானிய நடிகை முதல் முன்னாள் கால்பந்துவீரர் வரை பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது