இங்கிலாந்தில் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் விசித்திர நோயால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பையும்,சோகத்தையும் உண்டாக்கியுள்ளது. 


தூக்கம் என வந்துவிட்டால் நாம் அனைவருமே வேறு ஒரு உலகத்துக்குள் வாழ சென்று விடுவோம். கனவுகள் மூலம் நாம் நினைத்தவற்றை எல்லாம் நடத்தி முடித்து விட்டு காலையில் எழுந்து பார்க்கும்போது எதுவும் மாறாத ஏமாற்றமான நிலையை சந்தித்திருப்போம். சிலருக்கு தூக்கத்தில் நடப்பது, உளறுவது போன்ற பாதிப்புகள் இருக்கும். ஆனால் இங்கிலாந்தில் ஒரு பெண் தூக்கத்தில் ஷாப்பிங் செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?


ஆன்லைன் ஷாப்பிங் எல்லாம் தொழில் நுட்ப வளர்ச்சியால் அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. சாதாரண கர்சீஃப் தொடங்கி பைக் வரை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. உயிரினங்கள் தவிர மற்ற அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இப்படியான நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்லி நைப்ஸ் தூக்க கோளாறால் இரவு நேரங்களில் தன்னை அறியாமல் ஷாப்பிங் செய்கிறார். 


இதனால் இவருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களிடம் சென்று சோதனை செய்தபோது அவருக்கு பாராசோம்னியா என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்தில் சுயநினைவு இல்லாமலே பேசுவது, நடப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபடுகிறார்கள். தூக்கத்தின் போது மூளையின் ஒரு பகுதி மட்டும் செயல்படுவதால் இப்படி நடப்பதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது. 


கெல்லி நைப்ஸ் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெயிண்ட் வாளி, புத்தகம், விளையாட்டு பொருட்கள், மிட்டாய்கள், மேசை என தனக்கு சற்றும் தேவையில்லாத பொருட்களை வாங்கு குவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு கெல்லி நைப்ஸூக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் அவரது தூக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2010ல் வீட்டில் பிளாஸ்டிக் கூடைப்பந்து மைதானம் டெலிவரி செய்யப்பட்டதை கண்ட பிறகு தான் தன்னுடைய பிரச்சினையை தீவிரமாக எடுத்துள்ளார். 


அப்படி இருக்கும் கெல்லி ஆன்லைன் மூலம் பணம் திருடும் கும்பலிடம் பணத்தை பறிகொடுத்துள்ளார். தனிப்பட்ட வங்கி விவரம், கிரெடிட் கார்டு தகவல்களை ஆட்டோமேட்டிக் பாணியில் வைத்துள்ளதால் இதுவரை ரூ.3 லட்சம் கடனுக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கெல்லியின் இந்த பிரச்சினை பரிதாபத்தை உண்டாக்கியுள்ளது.