உலகம் முழுவதும் கொரோனா வைரசால், வளர்ந்த நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் கடந்தாண்டு முதல் பாதிக்கப்பட்டு வருகின்றது. இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரசின் பாதிப்பு கடந்தாண்டு முதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது டெல்டா வைரசால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் பாதிப்பும் பல இடங்களில் காணப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.


வெளிநாடுகளில் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்குவது, கட்டித்தழுவுதல் மரியாதை நிமித்தமான பழக்கங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவிலும் இந்த நடைமுறை தற்போது பெரும்பாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டில் பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை நிமித்தமாக கை குலுக்குவது, கட்டித்தழுவுவது போன்வற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மாட் ஹான். இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அமலில் இருக்கும் சூழலில், நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான மாட் ஹான் தனது உதவியாளரான ஜீனா கோலண்டேஞ்சேலாவுக்கு பொது இடத்தில் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானதுடன், அந்த நாட்டு ஊடகங்களில் வெளியானது. நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரே சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொண்டதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரே கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தது.




இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் மாட் ஹான், நாட்டின் பிரதமர் போரீஸ் ஜான்சனிடம் மன்னிப்பு கோரினார். மாட் ஹான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக போரீஸ் ஜான்சனும் அறிக்கை வெளியிட்டார். இருப்பினும், அவருக்கான கண்டனங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தததாலும், சொந்த கட்சியினரே மாட் ஹானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலும் மாட் ஹான் தனது சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக ஷாஜித் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார்.