இங்கிலாந்தின் லெயிட்டன் பஸார்ட் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான ஜெனிஃபர் ப்ராக்டர். இவர் 2019ல் ஸ்பெயினுக்கு விடுமுறைக்கால சுற்றுலா சென்றுள்ளார். அங்கே இவர் எதிர்கொண்ட சம்பவம்தான் இப்போது பரபரப்பாகி உள்ளது. ஸ்பெயினுக்கு விடுமுறைக்குச் சென்ற ஜெனிபருக்கு அது மகிழ்ச்சியானதாக அமையவில்லை.
கலைகளின் நகரமான ஸ்பெயின் அதன் வாட்டர்பார்க்குகளுக்கும் பெயர் போனது. சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவே அங்கே தீம் பார்க்குகள் அதிகம் நிறுவப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு தீம் பார்க்குக்கு சென்ற ஜெனிபருக்குதான் இப்படியொரு சோதனை நிகழ்ந்துள்ளது. தீம்பார்க்குகளில் பன்சாய் எனப்படும் ஒருவகை நீர்ச்சறுக்கு விளையாட்டு உண்டு. இதில் சுமார் 40 அடி உயரத்திலிருந்து ஒருவர் சறுக்கி நீரில் விழுவார்.  
இது மேற்கத்திய நாடுகளில் உள்ள தீம் பார்க்குகளில் அதிகம் காணப்படும்.  இப்படியான பன்சாய் ஒன்றில் விளையாடச் சென்ற ஜெனிபர் தற்போது தனது வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 2019ல் பன்சாயில் சறுக்கிவிளையாடச் சென்ற ஜெனிபர்அந்தச் சறுக்கு மரம் உடைந்து விழ அதிலிருந்து கீழே விழுந்துள்ளார். 
இதனால் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உயிருக்குப் போராடிய நிலையில் இவரது முதுகெலும்பை சீர்படுத்தும் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. 
அதன்பிறகு 9 மாதங்கள் அவர் அறுவைச்சிகிச்சைக்குப் பிறகான தொற்றால் பாதிக்கப்பட்டு அவதியுற்றிருக்கிறார். தற்போது அக்வாலாண்ட் நிறுவனத்தின் மீதும் அந்த பன்சாய்யை வடிமைத்த குழுவினர் மீது வழக்கு தொடர்ந்துள்ள ஜெனிஃபர் அந்த நிறுவனத்திடம் 500,000 யுரோ இழப்பீடு கோரியிருக்கிறார். 






ஜெனிபரின் வழக்கறிஞர் கூறுகையில்,’அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜெனிபர் 5.11 அடியில் இருந்து 5.7 அடியாகக் குறைந்துவிட்டார். மேலும் இவர் ஆசிரியராகப் பணிபுரியப் படித்துவந்தார் அதற்கான மொத்த செலவையும் அவர் தனது அறுவை சிகிச்சையில் செலவழித்துவிட்டார். அவருக்கான ஆசிரியர் படிப்புககான வாய்ப்பும் இதனால் பறிபோய் விட்டது. இதற்கிடையே தொற்றுநோயாலும் அவதிப்பட்டு வருகிறார். இதற்கெல்லாம் காரணமான அந்த நிறுவனம் நஷ்ட ஈடு தரவேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.