மதுரையில் பிறந்து, டொராண்டோவில் வசித்துவருபவர் ஆவணப்படத் தயாரிப்பாளரான லீனா மணிமேகலை. அவரது பிரதமர் மோடி, இந்துத்துவாவுக்கு எதிரான பழைய ட்வீட்கள் தற்போது வைரலாகி வருகின்றன.அண்மையில் வெளியான அவரது படத்தின் போஸ்டரில் ஒரு பெண் காளி வேடமிட்டு ப்ரைட் கொடியின் முன் புகைபிடிப்பதை சித்தரிக்கும் காட்சி சர்ச்சையானதை அடுத்து இந்த சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.


இயக்குநர் லீனாவின் 2013ம் ஆண்டு ட்வீட்டில், "என் வாழ்நாளில் மோடி இந்த நாட்டின் பிரதமரானால், எனது பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான்கார்டு மற்றும் எனது குடியுரிமை ஆகியவற்றை நான் சரணடைத்து விடுகிறேன். இதை நான் சத்தியம் செய்கிறேன்!' எனக் குறிப்பிட்டுருந்தார். இதை அடுத்து அவரது போஸ்டரால் கோபமடைந்துள்ள சில சமூக ஊடக ஃபாலோயர்கள் தற்போது இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து அவர் அதைச் செய்தாரா இல்லையா என்று கேட்டு வருகிறார்கள்.


2020ல் மற்றொரு ட்வீட்டில், லீனா மணிமேகலை, "ராமர் கடவுள் அல்ல, அவர் பாஜகவால் கண்டுபிடிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே" எனக் குறிப்பிட்டுள்ளார்.






கடும் சர்ச்சையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் டொராண்டோவில் உள்ள இந்திய உயர் கமிஷன் அதிகாரிகளால் கனடா அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் திரையிடல் ரத்து செய்யப்பட்டுள்ளது. டொராண்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஆகா கான் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் தற்போது மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளன.


இதுதவிர லீனாவின் ஆவணப்படத்தை தங்களது மாநிலத்தில் தடை செய்வது பற்றி அரசாங்கம் சிந்திக்கும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இந்த ஆவணப்படத்திற்கு எதிராக பீகாரில் உள்ள இரண்டு தனி நீதிமன்றங்களில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


சர்ச்சை தொடங்கியவுடன், லீனா மணிமேகலை தனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறினார். "நான் வாழும் காலம் வரை, நான் நம்புவதை பயமின்றி பேசும் குரலுடன் வாழ விரும்புகிறேன். அதற்கான விலை என் உயிராக இருந்தால், அதைக் கொடுக்கத் தயார்" என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் எழுதியுள்ளார்.










ஒரு மாலை நேரத்தில் டொராண்டோ நகரத்தின் தெருக்களில் காளி உலா வரும்போது நடக்கும் சம்பவங்களைப் பற்றியது படம்.