ரஷ்யா உடனான உக்ரைனின் போரில், ஸ்டார் லிங்க்கின் பங்களிப்பு எத்தகையது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், ஸ்டார் லிங்க்கிற்கு மாற்றாக வேறு ஒன்றை தேட வேண்டியிருக்கும் என போலந்து அமைச்சர் கூறியதையடுத்து, அவரை, தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளுத்து வாங்கியுள்ளார் ஸ்டார் லிங்க்கின் உரிமையாளரான எலான் மஸ்க். 


தனது எக்ஸ் தள பதிவால் சர்ச்சையை தொடங்கிய எலான் மஸ்க்


நேற்று எலான் மஸ்க் வெளியிட்ட ஒரு எக்ஸ் தள பதிவில், ஸ்டார்லிங்க் அமைப்பு, உக்ரேனிய ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளதாகவும், அதை தான் அணைத்தால், அவர்களின் ராணுவத்தின் முன்வரிசை முழுவதும் சரிந்துவிடும் என குறிப்பிட்டிருந்தார்.


மேலும், உண்மையில் அக்கறை உள்ளவர்கள், உண்மையில் யோசிப்பவர்கள், உண்மையாக புரிந்துகொள்பவர்கள், அங்கு நடக்கும் படுகொலைகளை நிறுத்தவே விரும்புவார்கள் என தெரிவித்துள்ள எலான் மஸ்க், இப்போதே அமைதி வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 






போலந்து வெளியுறவு அமைச்சரின் காரசாரமான பதிவு


எலான் மஸ்க்கின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, போலந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ரேடோஸ்லா சிகோர்ஸ்கி வெளியிட்ட தனது காரசாரமான எக்ஸ் தள பதிவில், உக்ரைனுக்கான ஸ்டார்லிங்க் சேவைக்ளுக்கு, போலந்து டிஜிட்டல்மயமாக்கல் அமைச்சகம் வருடத்திற்கு 50 மில்லியன் டாலர்கள் செலுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், ஆக்கிரமிப்பிற்கு உள்ளானவர்களை அச்சுறுத்தும் நெறிமுறைகள் தவிர்த்து, ஸ்டார்லிங்க் ஒரு நம்பகத்தன்மையற்ற சேவை வழங்குநராக அறியப்பட்டால், மாற்று சேவை வழங்குநரை தேடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் எனவும் கூறியுள்ளார்.






“அமைதியாய் இரு, சிறிய மனிதனே“ - எலான் மஸ்க் பதில்


போலந்து வெளியுறவுத்துறை அமைச்சரின் பதிலை பார்த்து கடுப்பான எலான் மஸ்க், “அமைதியாய் இரு, சிறிய மனிதனே“ என அவரை அவமதிக்கும் விதமாக பதிவிட்டார். செலவில் நீங்கள் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வழங்குகிறீர்கள் என்றும், மேலும் ஸ்டார்லிங்க்கிற்கு மாற்றே கிடையாது எனவும் பதிலளித்துள்ளார் எலான் மஸ்க்.






மஸ்க்கிற்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்


போலந்து வெளியுறவுத்துறை அமைச்சரின் பதிவிற்கு பதில் பதிவிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, உக்ரைனை ஸ்டார் லிங்க்கிலிருந்து துண்டிப்பதாக யாரும் அச்சுறுத்தவில்லை என எலானுக்கு ஆதரவளிக்கும் வகையில் கூறியுள்ளார். அதோடு, “நீங்கள் நன்றி கூற வேண்டும், ஏனென்றால், ஸ்டார் லிங்க் இல்லாவிட்டால் உக்ரைன் எப்போதோ போரில் தோற்றிருக்கும், அதோடு, ரஷ்யர்கள் போலந்து எல்லையில் இருந்திருப்பார்கள்“ என குறிப்பிட்டுள்ளார்.






இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள போலந்து வெளியுறவுத்துறை அமைச்சர், ஸ்டார்லிங்க் சேவை தொடரும் என்பதை உறுதி செய்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பாவும், அமெரிக்காவும் இணைந்து, அமைதியை ஏற்படுத்த உதவலாம் என குறிப்பிட்டுள்ளார்.