Sunita Williams: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெறும் 10 நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு சிக்கியுள்ளார்.


9 மாத எதிர்பாராத விண்வெளி வாழ்க்கை:


போயிங் ஸ்டார்லைனரில் 10 நாள் சோதனை பயணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தனர். செல்லும் வழியிலேயே சில தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டாலும், வெற்றிகரமாக இலக்கை அடைந்தனர். அதனதொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து மீண்டும் பூமிக்கு திரும்ப அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இதனால் அவர்கள் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியதாகிற்று.  இருவரும், கடந்த ஒன்பது மாதங்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அதன்படி, 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்ட அவர்களது பயணம், தற்போது 9 மாதங்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அண்மையில் தான், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை பூமிக்கு அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ளும்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினர்.



பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்:


ட்ரம்பின் அழுத்தங்களை தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்ப உள்ளனர் என்பதை நாசா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். திட்டமிடப்பட்டுள்ள நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-10 பயணத்தின் ஒரு பகுதியாக நான்கு சுற்றுலாப் பயணிகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு சுனிதாவும் வில்மோரும் பூமிக்கு திரும்பி வர முடியும். வானிலை சாதகமாக இருந்தால், மார்ச் 12 ஆம் தேதி இரவு 11:48 மணிக்கு (இந்திய நேரப்படி. 13 ஆம் தேதி காலை 5:18 மணிக்கு) ஃப்ளோரிடாவில் இருந்து பால்கன் ராக்கெட்டில் க்ரூ-10 விண்கலம் ஏவப்படும். விண்கலத்தில் வரும் 4 சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் வழிமுறைகளை வழங்கிய பிறகு,  மார்ச் 16 ஆம் தேதிக்குள் சுனிதாவும் வில்மோரும் பூமிக்கு திரும்பி வர முடியும் என்று நம்பப்படுகிறது.


பூமிக்கு திரும்புவது எப்படி?


சுனிதாவும் வில்மோரும். விண்வெளி நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ -9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள். இந்த விண்கலம் செப்டம்பரில் நிலையத்தை அடைந்தது. நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகியோரும் சுனிதாவுடன் திரும்பும் பயணத்தில் வருவார்கள். இருவரும் க்ரூ-9 மிஷன் மூலம் நிலையத்தை அடைந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் பிப்ரவரியில் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தனர். இப்போது. மார்ச் 16 அன்று நால்வரும் ஒன்றாகத் திரும்புவார்கள் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சூழல் சரியாக அமையாவிட்டால் பூமிக்கு திரும்பும் நாள் மார்ச் 19 அல்லது 20ம் தேதி வரை நீட்டிக்கப்படலாம்.


சுனிதா வில்லியம்ஸ் வேதனை:


சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடியே அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ், “ பூமியில் இருக்கும் எங்களுக்கானவர்களுக்கு நாங்கள் எப்போது திரும்பி வருகிறோம் என்பது சரியாகத் தெரியாமல் இருப்பதுதான் மிகவும் கடினமான பகுதி. இது அவர்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டராக இருந்திருக்கும்.  ஒருவேளை எங்களை விட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்" என கவலை தெரிவித்தார்.