வட கொரியாவால், கொரிய தீபகற்பப் பகுதி எப்போதுமே ஒரு பதற்றமான சூழலிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில், தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவருவதால், வட கொரியா அது குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தென் கொரியா-அமெரிக்கா கூட்டு ராணு பயிற்சி
வட கொரியாவால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், தென் கொரியாவை பாதுகாக்கும் வகையில், ஏராளமான அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. இந்நிலையில், இவ்விரு நாடுகளின் ராணுவமும் இணைந்து, அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இன்று தொடங்கி, வரும் 21-ம் தேதி வரை, ‘சுதந்திர கேடயம் 2025‘ என்ற பெயரில், தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
சொந்த கிராமத்திற்குள்ளேயே தவறுதலாக குண்டு வீசிய தென் கொரியா
இந்த பயிற்சிக்கான சில ஒத்திகைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தென் கொரியாவின் போச்சான் பகுதியில், கூட்டு போர் பயிற்சியின்போது, KF16 ரக போர் விமானம் ஒன்று, 8 MK82 ரக வெடிகுண்டுகளை, நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விடுத்து, தவறுதலாக வட கொரிய எல்லையிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில், உள்ள தென் கொரிய கிராமம் ஒன்றிற்குள் வீசியது. இதில் 15 பேர் காயமடைந்த நிலையில், ஒரு தேவாலயமும், இரண்டு வீடுகளும் சேதமடைந்தன. இது குறித்து விசாரிக்க, ராணுவம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தவறுதலாக ஒரு குண்டு விழுந்தால் கூட போர்“ - வட கொரியா
இப்படிப்பட்ட சூழலில், தென் கொரியா மற்றும் அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள வட கொரியா, இந்த பயிற்சி ஒரு ஆத்திரமூட்டும் செயல் என குறிப்பிட்டுள்ளது. மேலும், இது ஒரு ஆக்கிரமிப்பு மற்றும் மோதல் போர் ஒத்திகை என வட கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த வாரம், தென் கொரியாவின் துறைமுகமான பூசானுக்கு, அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் வருகை தந்ததை கடுமையாக சாடியுள்ள வட கொரியா, இது அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான ஆத்திரமூட்டும் செயல் என கூறியுள்ளது. அதோடு, ஏற்கனவே செய்தது போல், தென் கொரியா தவறுதலாக ஒரு குண்டை எங்கள் பக்கம் வீசிவிட்டால் கூட, அது போருக்கே வழிவகுக்கும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே, தென் கொரியா இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடும்போதெல்லாம், வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தி, அச்சுறுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை, மிகப்பெரிய அளவில் நடைபெறும் வட கொரிய ராணுவ பயிற்சி முகாம் ஒன்றிற்கு சென்ற அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், போர் பயிற்சியை தீவிரப்படுத்துமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது வட கொரியா இதுபோன்ற ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது, கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.