உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர், எப்போது என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.  ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல முன்னணி நிறுவனங்களின் உரிமையாளரான இவர், கருத்து சுதந்திரத்தை காக்க போவதாக கூறி, ட்விட்டர் நிறுவனத்தை வாங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டார். 


அலற விடும் எலான் மஸ்க்:


ஆனால், திடீரென திட்டத்தை கைவிடுவதாக கூறி, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இறுதியாக, பல சஸ்பென்ஸ்களுக்கு மத்தியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். இதை தொடர்ந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகளை அடுத்தடுத்து பணியில் இருந்து நீக்கினார்.  பணம் கொடுத்து, ப்ளூ டிக் (verified) வாங்கும் வசதியை கொண்டு வந்தார். ட்விட்டரின் பெயரை x என மாற்றினார். இப்படி, இவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் உலக அளவில் பேசுபொருளாக மாறுவது வழக்கமாகிவிட்டது. அதேபோல, பிரபலங்களை வம்புக்கு இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ள எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மெட்டா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜுக்கர்பெர்க்கை தொடர்ந்து வம்புக்கு இழுத்து வந்தார்.


உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள சண்டை:


அரசியல் தொடங்கி செயற்கை நுண்ணறிவு வரை பல விவகாரங்களில் இருவரும் நேர் எதிர் கருத்துகளை கொண்டுள்ளனர். இருவருக்கும் இடையேயான மோதலின் உச்சக்கட்டமாக, ஜுக்கர்பெர்க்குடன் கூண்டில் சண்டையிட தயார் என ட்விட்டரில் குறிப்பிட்டார். இதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி தந்த ஜுக்கர்பெர்க், "இடத்தை தேர்வு செய்து அனுப்பு" என குறிப்பிட்டார்.


இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தற்காப்பு கலைகளில் ஆர்வம் உள்ள ஜுக்கர்பெர்க், ஜப்பானிய மற்போர் போட்டியில் கலந்து கொண்டு, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தி வந்துள்ளார். அதுமட்டும் இன்றி, தான் பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கமாக கொண்டுள்ளார்.


நேரடியாக ஒளிபரப்பு:


எலான் மஸ்க்,ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு இடையேயான கூண்டு சண்டை தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து, சமூக வலைதளவாசிகள் உச்சக்கட்ட குஷியில் உள்ளனர். பெரும்பாலானா ட்விட்டர்வாசிகள், ஜுக்கர்பெர்கே வெற்றிபெறுவார் என கணித்து வருகின்றனர்.


இருவருக்கும் இடையேயான சண்டை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக புதிய அப்டேட் கொடுத்திருக்கிறார் மஸ்க். இந்த கூண்டு சண்டை, x சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என மஸ்க் அறிவித்துள்ளார். இதன் மூலம் கிடைக்க போகும் பணத்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்க உள்ளதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.