China Earthquake: சீனாவில் இன்று அதிகாலையிலேயே திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதால் இதுவரை 20 பேர் காயம் அடைந்துள்ளனர். 


சீனா நிலநடுக்கம்:


உலகின் பல்வேறு இடங்களில் சமீப காலமாகவே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று கூட ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவுகோலில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி, காஷ்மீரிலும் எதிரொலித்தது. அதாவது டெல்லி என்சிஆர் மற்றும் அருகில் உள்ள பகுதிகள், ஜம்மு காஷ்மீரின் சில இடங்களிலும், பாகிஸ்தானின் சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்டை நாடான சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


அதாவது இன்று அதிகாலை 2.30 மணியளவில் கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தின் டெசோ நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. டெசோ நகரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்நாட்டின் நிலநடுக்க அதிர்வை பதிவு செய்யும் மையம் உறுதி செய்துள்ளது.


20 பேர் காயம்:


அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கதால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. 


 





வீடுகள் உள்பட மொத்த 126 கட்டடங்கள் இடிந்து சேதமான நிலையில், 20 பேர் காயம் அடைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷடவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 


முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை சோகமாக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். 




மேலும் படிக்க 


Earthquake: டெல்லியில் நில அதிர்வு.. பீதியில் உறைந்த மக்கள்... தலைநகரில் பெரும் பரபரப்பு..!