பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்து:
பாகிஸ்தானில் ராவல்பிண்டி செல்லும் ஹசாரா விரைவு ரயில் தடம் புரண்டதில், 10 பெட்டிகள் கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் இருந்து 275 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ரயில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. பாதிக்கப்பட்ட மக்கள் நவாப்ஷாவில் உள்ள மக்கள் மருத்துவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், ரயில் தடம் புரண்டதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.
மீட்பு பணியில் ராணுவம்:
விபத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அவசரகால நெறிமுறை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு, அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் ரயில் பெட்டிகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் உதவி வருகின்றனர். மீட்பு பணிகள் முழுமையடைய 18 மணி நேரம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, சிந்து மாவட்டத்தை நோக்கி வரும் ரயில்களின் சேவையும், அங்கிருந்து புறப்படும் ரயில்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயலா?
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது ஒரு பயங்கரவாதச் செயலாக இருக்கக் கூடும் என்பதை அந்நாட்டின் மத்திய ரயில்வே அமைச்சர் நிராகரிக்கவில்லை. இதுதொடர்பாக பேசிய ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் கவாஜா சாத் ரபீக், ”சம்பவம் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மீட்பு பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
அதிகாரிகள் சொல்வது என்ன?
கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”பிரேக்குகளை தாமதமாகப் பயன்படுத்தியதால் விபத்தின் தீவிரம் கடுமையாக இருந்தது. ரயிலில் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சில மணிநேரங்களில் இயந்திரங்களை பயன்படுத்தி தடம் புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்தப்படும். தொடர்ந்து ரயில் சேவை சீரமையும்” என தெரிவித்தார்.