உலகின் 'நம்பர் 1' பணக்காரரான எலான் மஸ்க் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸாசுக்கு, பெரிய அளவிலான  ‘நம்பர் 2’ சிலையை அனுப்ப இருப்பதா நக்கலாக தெரிவித்துள்ளார்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO-வான எலான் மஸ்க் கடந்த திங்கட் கிழமை உலகின் நம்பர் 1 பணக்காரர் எனும் அந்தஸ்த்தை மீண்டும் பெற்றார்.


 இந்நிலையில் வரலாற்றில் 200 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பைக் கொண்ட மூன்றாவது நபர் எனும் பெருமையை அடைந்துள்ளார் எலான் மஸ்க் என பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பு அமேசானின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஸாஸ்தான் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். அப்போதே, எலான் மஸ்க்குக்கும், பெசாசுக்கும் இடையேயன செலபிரிட்டி சண்டைகள் அனைவரும் அறிந்ததுதான்.  இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் பெஸாசைப் பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் மஸ்க். இதனையடுத்து தங்களுக்கு எலான் மஸ்க்கிடம் இருந்து சிறிய மெயில் ஒன்று வந்ததாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அதில் இரண்டாம் இடத்தை பிடித்ததற்காக ராட்சத அளவிலான நம்பர் 2 சிலையையும், வெள்ளி மெடலையும் பெசாசுக்கு அனுப்பப்போவதாக கிண்டலாக தெரிவித்துள்ளார் மஸ்க்.


இரண்டு பணக்காரர்களுக்கான பங்காளிச் சண்டை பல நாட்களாகவே இருந்தது என்றாலும் கூட விண்வெளி, சுயமாக ஓட்டிச் செல்லும் கார் போன்ற ஆட்டோமொபைல் துறைகளில் கால்பதிக்க நினைத்ததிலிருந்து இருவருக்குமான மோதல்போக்கு இன்னும் அதிகரித்தது. 
மஸ்க், பெஸாசை வம்புக்கு இழுப்பது இது முதன்முறை கிடையாது. ஏற்கெனவே அவரை 2 முறை காபி கேட் (Copy Cat) என அழைத்துள்ளார். 
கடந்த 2020ல் ஆகஸ்ட் மாதம் 200பில்லியன் டாலர்கள் நெட் மதிப்புடன் முதலிடத்தில் இருந்தார் பெஸாஸ். ஆனால் அந்த ஆண்டின் இறுதியில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்குச் சந்தை மதிப்பு 720% அளவிற்கு வளர்ச்சியடைந்த நிலையில் பெஸாசுடன் போட்டிக்கு நின்றார் மஸ்க். இந்நிலையில் 200.7 பில்லியன் டாலர்களுடன் பண்க்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார். 192.5 பில்லியன் டாலர்களுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார் பெஸாஸ். இந்தப் பட்டியலில் 132 பில்லியன் டாலர்களுடன் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் 4ம் இடத்திலும், 128 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ் 5ம் இடத்திலும் உள்ளனர்.


முன்னதாக, நிலவில் மனிதர்களை தரையிறக்க ஸ்பேஸ்எக்ஸிற்கு 2.9 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை வழங்கிய நாசாவின் முடிவுக்கு பெசோஸின் ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜின் எதிர்ப்பு தெரிவித்தது. அதனை தொடர்ந்து ட்விட்டரில் அதனை கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டார் மஸ்க். 
இந்நிலையில் தற்போது பெஸாசிற்கு ‘நம்பர் 2’ ராட்சத சிலையையும், சில்வர் மெடலையும் அனுப்ப இருப்பதாக நக்கலாக தெரிவித்துள்ளார் மஸ்க்.