ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில் விரைவில் குளிர்காலம் தொடங்க இருக்கிறது. ஆனால் இந்த குளிர்காலம் பெரும் சிக்கலை பல வகைகளில் சந்திக்க வேண்டி இருக்கும் என தெரிகிறது. இயற்கை எரிவாயு என்பது முக்கியமான எரிபொருள். இங்கிலாந்து இயற்கை எரிவாயுவை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதன் மூலமே மின்சாரத்தை தயாரிக்கிறது. இங்கிலாந்தின் மின்சார தேவையில் 37 சதவீதம் அளவுக்கு இயற்கை எரிவாயுவை நம்பியே இருக்கிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இயற்கை எரிவாவு சேமிப்பு ஐரோப்பாவில் குறைந்திருக்கிறது. கோவிட்டுக்கு பிறகு சர்வதே பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் ஐரோப்பா மட்டுமல்லாமல் சீனாவிலும் இயற்கை எரிவாவுக்கான தேவை உயர்ந்திருக்கிறது. இதனால் இயற்கை எரிவாவு விலை அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் மட்டுமே 70 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் 500 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது.



இதனால் ரஷ்யா மற்றும் கத்தாரில் இருந்து கூடுதல் அளவுக்கு இயற்கை எரிவாயு சீனாவுக்கு செல்வதாக இங்கிலாந்துக்கு சப்ளை குறைந்திருக்கிறது. இயற்கை எரிவாயுவின் மிகப்பெரிய நுகர்வோர் சீனாதான். இதன் காரணமாக ஐரோப்பாவுக்கு பெரும் சிக்கல் உருவாகி இருக்கிறது. இங்கிலாந்தில் இயற்கை எரிவாயு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் வீடுகளில் உள்ள ஹீட்டர்களுக்கு கேஸ் தேவை, இங்கிலாந்தில் மின்சாரம் தயாரிப்பதற்கு கேஸ் தேவை, தொழில்துறைக்கு கேஸ் தேவை, உர நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்திருப்பதால் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. ஒரு வேளை கணிக்கப்பட்டதை விட வெப்ப நிலை குறைந்தால், அதனை எதிர்கொள்வதில் பெரும் சிக்கல் இருக்க கூடும் என தெரிகிறது இங்கிலாந்து மட்டுமல்லாமல் சீனாவில் உள்ள ஆலைகள், பிரேசிலில் உள்ள ஆலைகள் என இயற்கை எரிவாயு சர்வதேச பிரச்சினையாகி இருக்கிறது. சீனாவில் தொழில்துறைக்கு மின்சாரத்தை ரேஷன் முறையில் கொடுக்கிறது.  இதனால் ஸ்டீல் மற்றும் அலுமினியம் உள்ளிட்ட முக்கிய மெட்டல்களின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிகிறது.



ரஷ்யாவின் பங்கு

 

ரஷ்யாவின் பொதுத்துறை நிறுவனமான Gazprom ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயுவை அனுப்புகிறது. இந்த நிலையில் கூடுதல் இயற்கை எரிவாயுனை அனுப்புமாறு இங்கிலாந்து கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை ரஷ்ய நிறுவனம் நிராகரித்தது. ஐரோப்பாவுக்கு தேவைப்படும் இயற்கை எரிவாயுவில் 40 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்து வருகிறது. ஆனால் ரஷ்யா கூடுதலாக அனுப்ப மறுத்துவிட்டது.  இயற்கை எரிவாயு பிரச்சினையை ரஷ்யா அரசியலாக்குகிறது என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் விமர்சனம் செய்துள்ளன. மேலும் இந்த விலையேற்றத்துக்கும் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் அரசியல்வாதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

 

ஆனால் ரஷ்ய நிறுவனம் ஏற்கனவே செய்துகொண்டு ஒப்பந்தந்தை நிறைவேற்றி வருகிறோம். கூடுதலாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை விமர்சனம் செய்வது நியாயமற்றது என்பதுபோல பதில் அளித்திருக்கிறது. மின்சாரம் தயாரிக்க வேண்டும், வீடுகளுக்கு தேவைப்படும், தொழில்துறைக்கு தேவை என்பதால் தற்போதைய சிக்கல் எப்போது முடியும் என தெரியவில்லை. சப்ளைக்கும் தேவைக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கும் போது தொழில்துறை தேவையை நிறுத்த வேண்டியிருக்கும். இன்னும் சில மாதங்களுக்கு பிறகு வேறு வழியில் புதிய பிரச்சினை உருவாகும்.

 

புளூம்பெர்க் குறிப்பிட்டதை போல இயற்கை எரிவாயுவை இந்த உலகம் எவ்வளவு நம்பி இருக்கிறது என்பது இன்னும் சில வாரங்களில் தெரியும்.