உலக பணக்காரர்களின் முதன்மை இடத்தில் உள்ள எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக இருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அவர் வாங்குவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்னதாக அவர் ட்விட்டர் நிறுவனத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அந்த வகையில், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த தகவல்களை கேட்டிருந்தார். 


இந்நிலையில், போலி கணக்குகள் குறித்த தகவல்களை கொடுக்கவில்லை எனில் ஒப்பந்தத்தில் வெளியேறுவதாக எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து மஸ்க் சார்பாக அவரது வழக்கறிஞர் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில், "உறுதிமொழியை ட்விட்டர் மீறியுள்ளது. இதனால் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு அவர் முழு உரிமை உண்டு.




நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிபாட்டினை ட்விட்டர் வெளிப்படையாக மீறியுள்ளது என மஸ்க் கருதுகிறார். இதன் காரணமாக, தகவல்களை தராமல் ட்விட்டர் கால தாமதப்படுத்தியுள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிவிடுவேன் என மஸ்க் ட்விட்டரில் பலமுறை எச்சரித்திருந்தாலும், எழுத்துப்பூர்வமாக எச்சரித்திருப்பது இதுவே முதல்முறை. ஆனால், முன்னதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையை ட்விட்டர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. மேலும், ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும்படியும் என கேட்டு கொண்டுள்ளது.


"ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது" என மஸ்கும் மார்ச் மாதம் உறுதிபடுத்தியிருந்தார். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து தகவல்களுக்காக அவர் காத்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டரின் பங்குகள் 5.5 சதவிகிதம் குறைந்து 37.95 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகி வந்தது. ட்விட்டர் நிறுவனத்திற்கு மஸ்க் அனுப்பிய கடிதம் குறித்து அந்நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.


கடந்த 2021ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தனது ஆதரவாளர்களை வன்முறையில் ஈடுபடும் வகையில் அவர் தூண்டிவிட்டதன் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


இதனிடையே, கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தின் மீதான முடக்கம் திரும்ப பெறப்படும் என மஸ்க் அறிவித்துள்ளார். இது பெரும் விமர்சனங்களை பெற்றுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண