ட்விட்டரில் ப்ளூடிக் பயனாளர்கள் மாதம் 8 அமெரிக்க டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளார்.
உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். டெஸ்லா கார் சொகுசு கார் வகையை சேர்ந்தது. இந்த கார் உலக அளவில் மிகவும் பிரபலமாகும், இந்நிலையில்தான் சமீபத்தில் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என கூறியிருந்தார்.
அதோடு ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார். அதன் பங்குகளை வாங்கியதையடுத்து அவர் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக உள் நுழைந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி தன்வசப்படுத்தினார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
ட்விட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு இருக்கும். தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு முக்கிய தளமாக ட்விட்டர் விளங்குகிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களின் அறிவிப்பு, வாழ்த்து செய்தி போன்றவற்ரை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார்கள்.
இந்நிலையில் ட்விட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.