உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், பில்லியனருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளது ஒரு சாரரை அதிருப்தியில் ஆழ்த்தியிருந்தாலும், மற்றொரு தரப்பினர் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தும் மகிழ்ச்சி தெரிவித்தும் வருகின்றனர்.
அந்த வகையில் எலான் மஸ்க்கின் தீவிர ஆதரவாளர்கள் அவரை கவுரவிக்கும் வகையில் 30 அடி நீள சிலை ஒன்றை நிறுவியுள்ளனர்.
ஆடு போன்ற உடலும் எலான் மஸ்க் முகமும் கொண்ட இந்த சிலை ராக்கெட்டில் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டெய்லி மெயில் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தச் சிலையின் மதிப்பு 6 லட்சம் டாலர்கள் அதாவது சுமார் ரூ. 4.8 கோடி ஆகும். கனடாவைச் சேர்ந்த சிற்பிகளான கெவின் மற்றும் மிச்செல் ஸ்டோன் ஆகியோரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி எனும் நிறுவனம் இந்த சிலையை காட்சிப்படுத்தியுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள அவரது அலுவலகத்து எடுத்துச் செல்லப்பட்டு பரிசளிக்க உள்ளது.
முன்னதாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை முழுவதுமாக எலான் மஸ்க் கையகப்படுத்தினார். அதோடு, ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்கு பேரை பணி நீக்கம் செய்தார்.
ட்விட்டரை வாங்குவதாக அறிவித்த பின்னர், அதிலிருந்து பின்வாங்கிவிட்டு தற்போது அதை அவர் கையகப்படுத்தியிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இவ்வளவு பெரிய தொகையை அவர் எப்படி செலுத்தினார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.
எலான் டுவிட்டரை சொந்தமாக்கிக் கொள்ள டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை அவர் விற்பனைச செய்துள்ளதாக அமெரிக்கப் பங்கு பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.