அமெரிக்காவிலும் உலக அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குடியரசு கட்சி பெரும் வெற்றிபெரும் என கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி இருந்தது. இந்த முடிவுகள், அமெரிக்காவில் உலகளவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்த முடிவுகளை கருத்தில் கொண்டு, 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்ககூடும். அதேபோல, ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிகள் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் என்றால் என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அதாவது, செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபைகளுக்கும் இதில் தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் நடுவே இந்த தேர்தல் நடத்தப்படுவதால் இடைக்கால தேர்தல்கள் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில்தான் தேசிய அளவிலான சட்டங்கள் இயற்றப்படும். எந்த சட்டங்கள் இயற்றப்படும் வேண்டும் என்பதை பிரதிநிதிகள் சபையே முடிவு எடுக்கும். அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா இல்லையா என்பதை செனட் சபை முடிவு எடுக்க வேண்டும். அதிபரின் நியமனங்களை உறுதி செய்யும் அதிகாரமும் செனட் சபையிடம் உள்ளது. அதேபோல, அவருக்கு அதிபருக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டுமா என்பதையும் செனட் முடிவு செய்யும்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் இரண்டு செனட்டர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறு ஆண்டு பதவிக் காலம் இருக்கும். பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகளுக்கு இரண்டு ஆண்டுகள் பதவி காலம் இருக்கும். மேலும், அவர்கள், சிறிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பிரதிநிதிகள் சபையின் அனைத்து இடங்களுக்கும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
அதேபோல, செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பல பெரிய மாகாணங்களின் ஆளுநர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்றது யார்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கு, அவர் விரும்பிய சட்டங்களை நிறைவேற்ற இது உதவியாக இருந்தது. இச்சூழலில்தான், தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், 100 இடங்கள் கொண்ட செனட் சபையில் 35 இடங்களுக்கும் 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் நடைபெற்ற செனட் சபையின் 12 இடங்களில் ஜனநாயக கட்சியும் 19 இடங்களில் குடியரசு கட்சியும் வெற்றிபெற்றுள்ளது. இரு இடத்தை ஜனநாயக கட்சி கூடுதலாக பிடித்துள்ளது. நான்கு இடங்களுக்கு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதிநிதிகள் சபை தேர்தலில் 184 இடங்களில் ஜனநாயக கட்சியும் 207 இடங்களில் குடியரசு கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.