ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடரத் தொடங்கியுள்ளார். ட்விட்டரில் புதிதாக பிரதமர் மோடியைப் பின்தொடரும் 150 பேரின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ட்விட்டர், ஸ்பேக்ஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் நம்பர் 2 பணக்காரருமான எலான் மஸ்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது.


ட்விட்டர் தளத்தில் அதிகம் பின் தொடரப்படும் நபர் எலான் மஸ்க். அவருக்கு 134.5 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கே அதிக ஃபாலோயர்கள் இருந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் அவரை விஞ்சி அதிக ஃபாலோயர்களைப் பெற்றார். பராக் ஒபாமாவிற்கு 87.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அதேபோல் ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடரும் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடியும் இருக்கிறார்.இந்நிலையில் அவரை எலான் மஸ்க் பின் தொடர ஆரம்பித்துள்ளார்.இந்தத் தகவலை எலான் அலர்ட்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் எலான் மஸ்கின் ட்வீட்கள் அனைத்தையும் கண்காணித்து அதனை உடனுக்குடன் பிரபலப்படுத்துகின்றனர்.


ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் பின் தொடர ஆரம்பித்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. சிலர் இதனை வரவேற்றுள்ளனர். இதனால் விரைவில் டெஸ்லா கார் இந்தியாவுக்கு வரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.


ஒரு பதிவர், பிரதமர் மோடி அவர்கள் எங்கள் இந்திய தேசத்தை வளமானதாக, சிறப்பானதாக, முன்னேறிய நாடாக மாற்ற முற்படுகிறார். அதேபோல் எலான் மஸ்கும் இந்த உலகத்தை மேம்படுத்த முற்படுகிறார். இந்த உலகம் இன்னும் அறிவார்ந்ததாக மாற, நல்ல சமூகமாக மாற, தற்போதைய குழந்தைகளுக்கு இன்னும் சிறப்பான எதிர்காலத்தைத் தர உழைக்கிறார்கள். இருவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.


கின்னஸ் உலக சாதனை புத்தகத்தைப் பொருத்தவரை, ட்விட்டருக்கு தற்போது 450 மில்லியன் மாதாந்திர பயனர்கள் உள்ளனர். இதில் 30 சதவீதம் பேர் எலான் மஸ்கை பின்பற்றுகின்றனர்.


எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை வாங்கினார். அப்போது அவருக்கு 110 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தனர். இப்போது அவருக்கு 133 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
 
இந்தியாவில் எப்போது?


ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் பின் தொடர ஆரம்பித்துள்ளதால் விரைவில் டெஸ்லா கார் இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெஸ்லா கார் எப்போது இந்தியாவுக்கு வரும் என்பதுதான் மஸ்கிடம் இந்தியர்கள் அதிகம் கேட்கும் கேள்வி.


அது இப்போது மேலும் வலுத்துள்ளது. அண்மையில் இந்தக் கேள்விக்கு மஸ்க், இந்தியாவில் அதிகளவு வரி விதிக்கப்படுவதன் காரணமாகவே இந்தியாவில் டெஸ்லா தொடங்க முடியவில்லை என்று விளக்கமளித்திருந்தார். மேலும், இந்தியாவில் இறக்குமதி கார்களுக்கு ஒரே மாதிரி வரி விதிக்கப்படுகிறது. 40 ஆயிரம் டாலர்களுக்கு கீழே உள்ள கார்களுக்கு 60 சதவீதமும், இதற்கு மேலே விலையுள்ள கார்களக்கு 100 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விகிதம் மிகவும் அதிகம். அதனால், கணிசமாக குறைக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் வரிவிகிதம் மின்சார கார்களுக்கு இருக்கக்கூடாது. வரி விகிதம் 40 சதவீதம் 60 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.