எலான் மஸ்க்கிற்கு எதிராக பெண் ஒருவர் கொடுத்த புகாரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து சமாளித்ததாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகாரை மறுத்து ட்வீட் செய்துள்ளார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க் என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், சமீபத்தில் டிவிட்டர் டீல், இன்னும் சிலருக்கு X.com ஆன்லைன் வங்கி சேவை நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் எலான் மஸ்க். ட்விட்டரில் பேக் ஐடிக்கள் இருப்பதாகவும், அது குறித்த முழு தகவலும் கிடைத்து அந்த பிரச்சனை சரி செய்யப்படும் வரை நிறுத்தி வைப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் எலான் மஸ்க்கிற்கு எதிராக பெண் ஒருவர் கொடுத்த புகாரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து சமாளித்ததாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது. இன்சைடர் நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி 2016ல் இந்த சமபவம் நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. மஸ்க் பயன்படுத்திய தனி விமானம் கலிபோர்னியாவில் இருந்து கிளம்பி இருக்கிறது. இந்த விமானத்தில் பெண் ஒருவரிடம் எலான் மஸ்க் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் கொடுத்த புகாரின் படி, எலான் மஸ்க் அந்த பெண்ணை தனியாக அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணுக்கு முன் தன்னுடைய உடைகளை கழற்றி இருக்கிறார். மசாஜுக்கு பதிலாக குதிரையை அளிப்பதாக சொன்னதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் அந்த பெண் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் இதை பற்றி புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் தோழி ஒருவர் இந்த சம்பவம் உண்மை என்றும் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, "நான் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது. எழுதி வைத்துகொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.", என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.